search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் அடைந்த காவலாளி கிருஷ்ணபகதூர்
    X
    காயம் அடைந்த காவலாளி கிருஷ்ணபகதூர்

    கொடநாடு கொலை - கொள்ளை சம்பவம்: காயத்துடன் உயிர் தப்பிய காவலாளி ரத்த மாதிரி சேகரிப்பு

    கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரின் ரத்த மாதிரி, கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது.

    ஜெயலலிதா இங்கு வந்து ஓய்வு எடுத்து செல்வார். அப்போது எஸ்டேட்டை சுற்றியும் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

    மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது. அரசின் உயர் அதிகாரிகள் கூட ஜெயலலிதா உத்தரவு கிடைத்தால் மட்டுமே கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைய முடியும்.

    அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட்களை இழந்தது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    எனவே அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என்ற பரபரப்பு தொற்றியது.

    மிகவும் பாதுகாப்பு நிறைந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தங்ககட்டிகள், தங்க, வைர நகைகள், கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள், கட்சி தொடர்பான முக்கிய ஆவணங்கள் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 2 கார்களில் வந்த முகமூடி கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்து 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொடூரமாக கொலை செய்து உடலை தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். மேலும் 9-வது கேட்டில் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தொடர்ந்து முகமூடி கும்பல் ஜெயலலிதாவின் அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்கள் திறக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். ஆனால் அதில் என்ன இருந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை.

    இதற்கிடையே இந்த கொலை-கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெயலலிதா இருக்கும்போது அடிக்கடி கொடநாடு வந்து சென்ற சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் எஸ்டேட், பங்களா நிர்வாகிகள் சிலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க, காயம் அடைந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட முகமூடி கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துள்ளனர். ஆனால் உயிர்தப்பிய கிருஷ்ணபகதூருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

    எனவே முகமூடி கொள்ளையர்களுக்கு அவர் உதவியாக இருந்தாரா? அல்லது முன் விரோதம் காரணமாக ஓம்பகதூரை கொலை செய்தாரா? என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.

    இதையடுத்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காவலாளி கிருஷ்ண பகதூரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று கொடநாடுக்கு அழைத்து வந்தனர். அவர் முகமூடி கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நடித்து காட்டினார். மேலும் நீலகிரி மாவட்ட தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு வந்து ஜெயலலிதா அறை ஜன்னல் கண்ணாடி அருகே படிந்திருந்த ரத்த மாதிரிகளை சேகரித்தனர். அங்கு படிந்திருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

    மேலும் காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரின் ரத்த மாதிரி, கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இவை இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பொதுவாகவே கொடநாடு பங்களாவில் அரசு நிர்வாகத்தை வழிநடத்த தனியாக அரங்கு உள்ளது. இங்கு மட்டுமே ஜெயலலிதா அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். மற்ற அறைகளில் ஜெயலலிதா, சசிகலாவை தவிர வேறு யாரும் செல்ல முடியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டார். சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    எனவே பங்களாவுக்குள் என்ன இருந்தது? என்று வேறு யாருக்கும் தெரியவில்லை. எனவே கொள்ளை கும்பல் பிடிப்பட்டால் மட்டுமே கொடநாடு பங்களாவில் எவ்வளவு கொள்ளை போனது? என்று தெரியவரும். எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கொடநாடு எஸ்டேட்டில் கொலை - கொள்ளை சம்பவத்திற்கு பின்பு 24 மணிநேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    Next Story
    ×