search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூடுதல் பிரமாண பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர். இதேபோல் சசிகலா ஆதரவு அணியினரும் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பும், சசிகலா தரப்பினரும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.

    கட்சியில் உள்ள பெரும்பாலான பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சசிகலா தரப்பில் பதில் அளித்ததையடுத்து, இரு தரப்பினரையும் விசாரித்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க கட்சிப் பெயர் ஆகியவற்றை தற்காலிகமாக முடக்கி வைத்து உத்தரவிட்டிருந்தது.



    ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் 87 தொகுப்புகளில் 6,500 உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரு அணிகளும் ஒன்றாக இணைவதற்கான காலம் கனிந்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் இன்று கூறியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களால் அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
    Next Story
    ×