search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
    X

    விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சங்கரன் கோவில், வள்ளியூர், களக்காடு, சிவகிரி, நாங்குநேரி, பாவூர்சத்திரம், சுரண்டை, தாழையூத்து, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.
    நெல்லை:

    நெல்லை நகரில் டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப் பாளையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. டவுனில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சந்திப்பு மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. வெளியூர் செல்லும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் கூட்டம் இல்லை. பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் லாரிகள் எதுவும் இயக்கப்படவில்லை. நெல்லை டவுண், பாளை, நயினார்குளம் மார்க்கெட்டுகளில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்ததால், காய்கறிகளுடன் லாரிகள் மார்க்கெட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.

    முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து நெல்லையில் சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை, சந்திப்பு ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியிலும் ஈடுபட்டார்கள்.

    தூத்துக்குடியில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார், வேன், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது. தூத்துக்குடி காமராஜர் காய்கறி மார்க்கெட் காலை 10 மணிவரை செயல்பட்டது. பின்னர் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராலிங்க தேவர் நகராட்சி தினசரி மார்க்கெட் சந்தையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக இன்று அடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில்பட்டி பஜார் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    இங்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடியது. விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டபிடாரம், எட்டயபுரம், திருச்செந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மத்திய மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையிலும், வள்ளியூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை யிலும், பாளை பஸ் நிலையம் அருகே டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ தலைமையிலும், தென்காசியில் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.


    Next Story
    ×