search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறைக்காற்றுடன் மழை: களக்காட்டில் 5 ஆயிரம் வாழைகள் சேதம்
    X

    சூறைக்காற்றுடன் மழை: களக்காட்டில் 5 ஆயிரம் வாழைகள் சேதம்

    களக்காடு வட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றும் வீசுவதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்படுத்தி உள்ளன. நேற்று மாவட்டத்தில் களக்காடு, சிவகிரி, செங்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 37.90 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 43.52 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 51.40 அடியாகவும், ராமநதி அணை 36.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 37.24 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 19.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 43.50 அடியாகவும் உள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கோட்டையில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைப்பகுதியில் கருப்பாநதி அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    களக்காடு வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீர் என்று மழை பெய்தது. மழை தொடங்கியதும், சூறாவளி காற்று வீசியது. காற்று அதிகமாக இருந்தது. இதனால் களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்த சுப்பையா (வயது70), பூரணம் (50), அப்பாத்துரை (45) கீழப்பத்தையை சேர்ந்த வேலாயுதம் (75), நடராஜன் (70) உள்பட பலர் தோட்டத்தில் வாழைகள் சாய்ந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகியுள்ளது.

    இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வறட்சியான வேளையில் கடும் சிரமத்திற்கிடையே விலைக்கு தண்ணீர் வாங்கி வாழைகளுக்கு பாய்த்து வந்தனர். மேலும் வங்கிகளில் கடன் பெற்றும் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் காற்றினால் வாழைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×