search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே 7 வயது சிறுவனின் முயற்சியால் மதுக்கடை மூடப்பட்டது
    X

    திருப்போரூர் அருகே 7 வயது சிறுவனின் முயற்சியால் மதுக்கடை மூடப்பட்டது

    திருப்போரூர் அருகே 7 வயது சிறுவனின் முயற்சியால் மதுக்கடையை கலெக்டர் பொன்னையன் அதிரடியாக மூட உத்தரவிட்டார்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் கடந்த 15-ந் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவே அப்பகுதி மக்கள் மதுக்கடையை உடைத்து சூறையாடினர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 132 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.

    சில நாட்களுக்கு முன்பு, மதுக்கடையை மூடக்கோரி படூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆகாஷ் தனி ஒருவனாக போராட்டத்தில் குதித்தான்.

    அவன் பள்ளிச்சீருடையில் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டான். அவனை போலீசார் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சிறுவன் ஆகாஷ், படூரில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி மீண்டும் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 13 பேருடன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றான். அவர்கள் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனுவை நேரடியாக அளித்தனர்.

    அதில், எங்களது படூர் கிராமத்தில் இதுவரை மதுபானக்கடை திறக்கப்பட்டது இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன் படூரில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டது.

    அதனை எதிர்த்து போராடிய பொதுமக்கள் பலர் மேல் வழக்கு போடப்பட்டு, அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார்கள்.

    மதுவால் ஏற்கனவே எங்களது கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு என்பது எங்கள் கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்து விடும். உடனடியாக எங்களது கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடுவதுடன், படூர் கிராமப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வேறு எங்கும் மதுக்கடையை புதியதாகவும் திறக்கக்கூடாது என்ற ஆணையை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து படூரில் உள்ள மதுக்கடையை மூட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மதுக்கடை நேற்று மாலை உடனடியாக மூடப்பட்டது.

    மதுக்கடை மூடப்பட்டதால் படூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுக்கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக முறையிட்ட சிறுவன் ஆகாஷ் உள்பட மாணவ-மாணவிகளை அவர்கள் பாராட்டினர்.

    சிறுவன் ஆகாஷ் தற்போது 2-ம் வகுப்பு முடித்துவிட்டு 3-ம் வகுப்புக்கு செல்ல இருக்கிறான். அவன் ஏற்கனவே ஹெல்மெட் விழிப்புணர்வு, சீமை கருவேல மர ஒழிப்பு, நாட்டு கோழி வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு செய்து உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×