search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் கடைகள் அடைப்பு: தி.மு.க.வினர் மறியல் - எம்.எல்.ஏ. உள்பட 1000 பேர் கைது
    X

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் கடைகள் அடைப்பு: தி.மு.க.வினர் மறியல் - எம்.எல்.ஏ. உள்பட 1000 பேர் கைது

    விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சீபுரம், திருவள்ளூரில் தி.மு.க.வினர் நடத்திய மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ. உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் நகரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் பஜார் வீதி, பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது.

    பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து ஆந்திரா மற்றும் திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

    இதில் பஸ் கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதே போல் காஞ்சீபுரத்தில் இருந்து திருவள்ளூருக்கு வந்த தனியார் பஸ் மீதும் அதே இடத்தில் கல் வீசப்பட்டது. இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் பணிமனை அருகே செங்கல்பட்டில் இருந்து வந்த அரசு பஸ்சும் கல் வீசி உடைக்கப்பட்டது.

    திருவள்ளூர் ஜெ.என். சாலை காக்களூர் சிக்னல் அருகே தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் நாசர், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி. புகழேந்தி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் உள்பட 500 பேரை கைது செய்தனர். அவர்கள் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    அசம்பாவிதத்தை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சாம்சன் உத்தரவின் பேரில் 5 சப்-டிவிசன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள்,ரெயில் நிலையங்கள், கோவில்கள் என முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சென்னை நோக்கி வரும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களுக்கு முழுமையாக அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படவில்லை.

    சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஒரு சில சிறிய தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. அங்கு வசித்து வரும் தமிழ் அகதிகள், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை முகாமில் ஒட்டி இருந்தனர்.

    ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. அண்ணாசிலை அருகே பொதுக் குழு உறுப்பினர் அபிராமிகுமரவேல் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர் அப்துல்ரஷீத், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மைப் பிரிவு துணைத்தலைவர் சம்சுதீன், நிர்வாகிகள் கார்த்தி, பார்திபன், சுரேஷ்,அப்துல்ரகீம், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி வேன்பாக்கம், மீஞ்சூர் பழவேற்காடு, மெதுர் திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை.

    ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம் போல் ஓடின. முழு அடைப்பு போராட்டம் காரணமாக முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    பொன்னேரி பேரூர் கழக செயலாளர் டாக்டர் விஸ்வநாதன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் பூந்தமல்லி தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேசிங் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆவடி பஸ் நிலையம் அருகே தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்தனர். சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    காஞ்சிபுரத்தில் பரபரப்பாக காணப்படும் காந்தி ரோடு, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு, அன்னை இந்திரா காந்தி சாலை, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

    அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின, ஷேர் ஆட்டோ, டாடா மேஜிக் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட வில்லை. ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டது.

    முக்கிய சாலைகளில் உள்ள உணவகங்கள் அடைக்கப்பட்டதால் காஞ்சீபுரத்தில் கோயில்களுக்கும் மற்றும் பட்டு சேலைகள் எடுக்கவும் வந்த வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் சாலையோரங்களில் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தேரடி பகுதியில் இருந்து காஞ்சிபுரம் பஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால், நகர செயலாளர் சதீஷ், துணை தலைவர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுதி பொறுப்பாளர் மேனகா தேவி உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

    செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில், மறை மலைநகர், காட்டாங் கொளத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    Next Story
    ×