search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
    X

    மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

    மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தி மொழியை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிப்பதற்கு மீண்டும் மீண்டும் பா.ஜ.க அரசு முயற்சித்து வருகிறது. இப்பொழுது ‘சி.பி.எஸ்.இ’ பள்ளிகளிலும் ‘கேந்திர வித்தியாலயா’ பள்ளிகளிலும் இந்தி படிப்பதை கட்டாயமாக்க வேண்டுமென்பதற்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பு முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கூட்டாச்சி தத்துவத்திற்கு ஊறுவிளைக்கும் என்பதையும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    அலுவல் மொழிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளித்த பரிந்துரைகளுக்கு இப்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

    இந்தியாவில், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் இந்தி மொழியில்தான் உரையாற்ற வேண்டும்; விமானங்களிலும் புகைவண்டி நிலையங்களிலும் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும்.

    நீதி, நிர்வாகம் போன்றவற்றில் ஆங்கில பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இந்தியை பயன்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பரிந்துரைகளை பாராளுமன்றக் குழு அளித்திருந்தது.

    பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என்பதும் அக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இப்போது குடியரசுத் தலைவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் மத்திய அரசு இவற்றை செயல் படுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் இவற்றை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் இந்த பரிந்துரைகளை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் இந்தியை திணிப்பதற்கு பா.ஜ.க அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆங்கிலம் படிப்பதைவிட இந்தி படிப்பது மனித மூளைக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார் களென்றும். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயம் ஆக்குவதுதான் சமத்துவம் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி படிக்காததால் டீ கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க கஷ்டப்படுகிறார்கள் எனவும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் யாவும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு, குடியரசு தலைவரை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தியும் இந்தியைத் திணிப்பதற்கு பா.ஜ.க மேற்கொண்டுவரும் முயற்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலைவைக்கக்கூடிய ஆபத்தான முயற்சியாகும்.

    எனவே, இந்தி திணிப்புக் கொள்கையை கைவிடுமாறு பா.ஜ.க அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் கண்ட மொழிப்போர்க் களம் மீண்டும் உருவாகும் என்று எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறோம்.

    இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

    Next Story
    ×