search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பை, சங்கரன்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை: மின்கம்பங்கள் - மரங்கள் முறிந்து விழுந்தன
    X

    அம்பை, சங்கரன்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை: மின்கம்பங்கள் - மரங்கள் முறிந்து விழுந்தன

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தற்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள், குளங்களில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை. பருவ மழை பொய்த்ததால் விவசாயம் இல்லாமல் நிலங்கள் வறண்டு காட்சியளிக்கின்றன. பாசன குளங்கள் பாலைவனம் போலா ஆகி விட்டது. இருபோகம், முப்போகம் விளைந்த வயல்வெளிகள் ஒரு போகத்துக்கே நீர் இல்லாமல் திணறின.

    சில பகுதிகளில் பயிர்கள் கருகியது. வழக்கத்தை விட அதிகமான வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக வெயில் உச்சத்தை தாண்டி வாட்டியது.

    இதனிடையே நேற்று நெல்லை மாவட்டத்தில் அம்பை, சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அம்பையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன. அம்பை முடப்பாலம் அருகே பெரிய பனைமரம் சாய்ந்தது. அருகில் இருந்த 5 மின் கம்பங்கள் சாய்ந்தன.

    சம்பவ இடத்துக்கு அம்பை தீயணைப்பு படையினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பங்களை கற்றி மின்வினியோகத்தை சரி செய்தார்கள். பாபநாசம் மலைப்பகுதியிலும் மிதமான மழை பெய்தது. அணைகளின் நீர் பிடிப்பு பகுதியிலும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.




    பிரதான பாசன அணையான பாபநாசம் அணைப்பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. இந்த அணை நீர்மட்டம் இன்று காலை 38.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிற‌து. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 204.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு, மணிமுத்தாறு அணைப்பகுதியில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 43.69 அடியாகவும் உள்ளன. அணைப்பகுதி தவிர மற்ற இடங்களில் சிவகிரியில் 4.2 மில்லிமீட்டர் மழையும், அம்பையில் 3 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அதற்கு முன்பு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் ஜமீன்இலந்தைகுளம் பகுதியில் உள்ள இந்திரா காலனியில் உள்ள பல வீடுகளின் கூரைகள், மற்றும் மாட்டு தொழுவங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. சண்முகையா (60) என்பவரின் மாட்டு தொழுவமும், வேல்த்தாய் என்பவரின் வீட்டு கூரையும் காற்றில் பறந்து சேதமடைந்தன. மேலும் அந்த பகுதியில் விளை நிலங்களில் பயிரிட்டிருந்த ஏராளமான பயிர்கள் சேதமடைந்தன.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்து, எராளமான மின்கம்பங்கள் சரிந்து, பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது மீண்டும் அதே மாதிரியான சம்பவம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இது பற்றி அரசு அதிகாரிகள் விஞ்ஞான முறைப்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மூக்கையா மகன் உடையார்சாமி (50) இவர் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய மழையின் போது, கலிங்கப்பட்டி பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

    இதே போல் அ.கரிசல் குளத்தை சேர்ந்த ராமசாமி நாயக்கர் என்பவரின் பசுமாடு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்தது. மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இந்த மாடும் உயிரிழந்தது.
    Next Story
    ×