search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்ற தமிழக விவசாயிகள் நேற்று சென்னை புறப்பட்டனர்.
    X
    டெல்லியில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்ற தமிழக விவசாயிகள் நேற்று சென்னை புறப்பட்டனர்.

    டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் நாளை முழு அடைப்பில் பங்கேற்பு

    டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் நாளை காலை சென்னையில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
    திருச்சி:

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிரதமரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முறையிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் டெல்லிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜந்தர் மந்தருக்கு சென்று அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். அதுகுறித்த விபரங்களையும் நேற்று மாலை அய்யாக்கண்ணுவிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    போராட்டத்தை வாபஸ் பெற்ற விவசாயிகள் நேற்று இரவு 10.30 மணிக்கு தமிழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். மொத்தம் 73 விவசாயிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தில் நாளை (25-ந் தேதி) செவ்வாய்கிழமை தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் டெல்லி போராட்ட விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    நாளை காலை சென்னை வந்தடையும் விவசாயிகள் சென்னையில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது :-

    தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். மே 25-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறோம். எங்கள் போராட்டத்திற்கு 41 நாட்கள் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழக விவசாயிகளுடன் ஜந்தர் மந்தர் மற்றும் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
    Next Story
    ×