search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: ராமதாஸ்
    X

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: ராமதாஸ்

    தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமிப்பதில் ஊழலும், முறைகேடுகளும் பெருமளவில் நடப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் 20.08.09ஆம் ஆண்டு மீன்வளக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றிய போது, அவர் மேற்கொண்ட ஆய்வுத் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக அவர் மீது லஞ்சத்தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அவரது துறைத்தலைவர் பரிந்துரைத்திருந்தார். அக்குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் புகார்கள் குறித்த கோப்புகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பொன்னேரியிலுள்ள அரசு மீன்வளக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

    பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் முதல்வராக பதவியேற்ற பிறகு அங்கு பணியாற்றிய ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது, பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், மாதவரம் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஓர் அலுவலக உதவியாளர் உட்பட பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது குறித்த குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.

    பல்கலைக்கழகம் என்பது கல்வியை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆலயம் ஆகும். அத்தகைய கல்விக்கோவிலுக்கு பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் சரியான நடவடிக்கை ஆகும்? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய அவலம் என்று கூற முடியாது. தமிழகத்தின் சிறிய பல்கலைக்கழகமான வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் வரை அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஊழலும், முறைகேடுகளும் பெருமளவில் தலைவிரித்தாடுகின்றன.

    துணைவேந்தர் பதவிகள் ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலை பேசி விற்பனை செய்யப்படுகின்றன. துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை நியமிப்பதிலேயே ஊழல் தொடங்கிவிடுகிறது.

    தமிழகத்தில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தலைசிறந்த கல்வியாளர்கள் மட்டுமே தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகியவை குறித்த தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

    கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் 3 பேரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு தெரிவிக்க வேண்டும். அவர்களிலிருந்து ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் போது அவருக்குள்ள சிறப்புத் தகுதிகள் என்ன? என்பதை ஆளுனர் அலுவலகம் விளக்க வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.

    எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய துணைவேந்தர்களை தமிழக அரசும், ஆளுனரும் நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×