search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்தால் பன்னீர்செல்வம்தான் முதலில் சிக்குவார்: ஸ்டாலின்
    X

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்தால் பன்னீர்செல்வம்தான் முதலில் சிக்குவார்: ஸ்டாலின்

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்தால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலில் சிக்குவார் என்று பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பலவிதமாக நமது விவசாயிகள் போராட்டங்களை நடத்திய பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசி இருக்கிறார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக சென்றார் என்றால் கிடையாது. வேறு சில பிரச்சினைகள் பற்றி கருத்து கேட்க பிரதமர் அழைத்து இருக்கிறார். அதற்கான கூட்டத்தில் பிரதமரை சந்திக்க சென்ற அவர் ஒரு பேருக்காக ஒப்புக்காக ஒரு சடங்காக விவசாயிகளை சந்தித்து இருக்கிறார்.

    முன்பு முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். டெல்லிக்கு எப்படி எல்லாம் ஜால்ரா போட வேண்டுமோ, அப்படியெல்லாம் போட்டு விட்டு வந்துவிட்டார். இப்போது இ.பி.எஸ். டெல்லிக்குப் போய் ஜால்ரா போட்டு விட்டு வந்திருக்கிறார். ஏற்கனவே ஒன்றாக இருந்து கொள்ளையடித்தவர்கள், பிறகு இரண்டாகப் பிரிந்து, இப்போது மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து கொள்ளையடிக்க முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இந்த நாட்டை பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

    அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் தி.மு.க. 89 எண்ணிலிருந்து 90 ஆக மாறியிருக்கும். இந்த செய்தி மத்தியில் இருக்கக் கூடிய பி.ஜே.பி.க்கு, மோடிக்கு தெரிந்த காரணத்தினால்தான்,

    ஓ.பி.எஸ். அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவர்கள் போட்ட கணக்கு மாறியதை அறிந்து, உண்மை நிலை அப்படியில்லை என்பதை உணர்ந்து, அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும். தி.மு.க. பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறப்போகிறது, மற்ற எல்லா கட்சிகளும் டெபாசிட் இழக்கப் போகின்றன என்ற தகவல் டெல்லிக்கு சென்ற காரணத்தால்தான், இந்த நாடகம் நடத்தப்படுகிறது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீடடில் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 89 கோடி பண பட்டுவாடா செய்ததாக ஆதாரங்கள் கிடைக்கிறது எனில், ஆடிட்டர்கள் கூடி அப்படியொரு கணக்கு வைத்திருக்க மாட்டார்கள்.

    அப்படியொரு நல்ல ஆடிட்டர் விஜயபாஸ்கர் வாங்கின கையெழுத்து, கொடுத்த கையெழுத்து என அவர்கள் வைத்திருந்த நகல்கள் சிக்கன. தலைமைக்கு கணக்கை சரியாக கொடுக்கும் நாணயஸ்தராம் விஜயபாஸ்கர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 7 அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கோடிகள் என தெளிவாக எழுதப்பட்டு உள்ளது.

    ஒரு டாக்டர் ரூ.5 லட்சம் கொடுத்ததாக கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் அரசு மருத்துவரான டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது யார் மூலமாக சென்றது என்பதை தெரிவிக்க எச்.எம். என்று குறிப்பிட்டு, அது யாரென்றால் ஹெல்த் மினிஸ்டர். அந்த டாக்டர் யாரென்றால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் 3 இடைத்தேர்தல் நடைபெற்றன.

    அந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பாளர்களுக்கு ஜெயலலிதாவால் கையெழுத்து போட முடியாத காரணத்தால் கை நாட்டு வைத்ததாக சான்று வழங்கிய டாக்டர்தான் இந்த டாக்டர் பாலாஜி. ஏனெனில் அது ஜெயலலிதாவின் கையெழுத்தே கிடையாது. இதை விசாரணைக்கு வையுங்கள். நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபிக்க நான் தயார் நீங்கள் தயாரா?

    ஒரு அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கக் கூடியவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரின் கையெழுத்தை பெறுவதற்கு ஏன் ரூ.5 லட்சம்? நான் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள். அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.சுக்கு தெரிந்துதான் இது நடந்திருக்கிறது. ஆனால், நீதி விசாரணை வேண்டுமென ஓ.பி.எஸ். கேட்கின்ற போதெல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார் நீதி விசாரணை வைத்தால் முதலில் சிக்குவது ஓ.பி.எஸ்.தான்.

    இந்த நிலையில் அவருடைய பிரச்சினைகள் வருமான வரித்துறையினரிடம் சிக்கியிருக்கிறது, ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மங்கள் சிக்கியிருக்கிறது, மர்மம் என்ன என்ற கேள்வி எழும்பியிருக்கிறது,

    நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், இரு அணியாக பிரிந்து மறுபடி ஒரு அணியாக சேர்பவர்கள், இனி நீதி விசாரணை கேட்பார்களா இல்லையா என்று தெரியாது, ஆனால், விரைவில் தமிழகத்தில் மக்களால் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழும்போது, தி.மு.க.வின் ஆட்சி தமிழகத்தில் உருவாகும், அப்போது, ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த விசாரணையை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியோடு தெரிவிக்கிறேன்.

    பெருச்சாளிகள் நுழைந்து நெற்களஞ்சியங்களுக்குள் நுழைந்து நெல் சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம், அதுபோல இன்றைக்கு தமிழகத்தில் புகுந்துள்ள அ.தி.மு.க. என்ற ஊழல் பெருச்சாளிகள் புகுந்து அரசின் கஜானாவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனவே, விவசாயிகள் வேதனைகளைப் புறக்கணிக்கும் அரசுகளை எச்சரிப்போம். ஆட்சி மாற்றத்துக்கு அணிவகுப்போம்.
    Next Story
    ×