search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்திய காட்சி.

    தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் விடிய விடிய போராட்டம்

    மருத்துவ கல்லூரி நிர்வாகி மாணவ-மாணவிகளின் பிரச்சினையை முறையாக அணுகவில்லை என்று மாணவ-மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் ஜி.என்.மில் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் மார்ட்டின் ஓமியோபதி மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 250 பேர் படித்து வருகிறார்கள்.

    கல்லூரி முதல்வராக செந்தில்குமரன் என்பவர் இருந்து வந்தார். இவர் மாணவ-மாணவிகளிடம் தவறாக பேசுவதாக கூறி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

    மேலும் கல்லூரி முதல்வராக முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இருப்பினும் செந்தில் குமரன் முதல்வர் போல் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மருத்துவ கல்லூரி நிர்வாகி லீமா ரோஸ் மாணவ-மாணவிகளின் பிரச்சினையை முறையாக அணுகவில்லை என்று மாணவ-மாணவிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    மாணவிகள் வாயில் துணியை கட்டிக்கொண்டு இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் பெரிய நாயக்கன் பாளையம் டி.எஸ்.பி. சீனிவாசலு, துடியலூர் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், வருவாய்த் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்திய 2 மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே மற்ற மாணவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

    நள்ளிரவு பிறகும் விடிய விடிய போராட்டம் தொடர்ந்தது.

    இன்று காலை மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 மாணவிகள், தங்களது பெற்றோர்களுடன் சென்றனர்.

    இந்த போராட்டம் பற்றி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

    செந்தில் குமரன் மாணவிகளிடம் தவறாக பேசியதை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால் கல்லூரி நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது.

    மேலும் எங்களது போராட்டத்தை சீர் குலைக்க வெளிநாட்டு நாய்களை ஏவி விட்டும் வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Next Story
    ×