search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது
    X

    முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது

    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறி உள்ளார்.
    சேலம்:

    தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி காரணமாக இறந்த விவசாயிகள் அனைவரின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர்மந்தரில் அறவழியில் போராடி வருகிறார்கள்.

    இவர்களது கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

    அதனால் எங்களது கூட்டமைப்பின் சார்பில் அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 55 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு நிர்வாகிகள் கூறுகையில், முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதா, வேண்டாமா? என்பது குறித்து இன்று மாலை சென்னையில் கூடி முடிவு செய்ய உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×