search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கன்னத்தில் அறைந்தது ஏன்?: ஏ.டி.எஸ்.பி.யிடம் 3 மணி நேரம் விசாரணை
    X

    பெண் கன்னத்தில் அறைந்தது ஏன்?: ஏ.டி.எஸ்.பி.யிடம் 3 மணி நேரம் விசாரணை

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மறியல் போராட்டத்தின்போது ஈஸ்வரியை கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் கடந்த 11-ந் தேதி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியல் போராட்டம் நடத்திய போது திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் வந்த போலீசார், தடியடி நடத்தினர்.

    இதில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சாமளாபுரம் தடியடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முதல் கட்டமாக தடியடி சம்பவத்தின் போது பணியில் இருந்த பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைத்து ஏ.டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்ட ஈஸ்வரி, மற்றும் காயம் அடைந்த சிவகணேசன் உள்பட 22 பேரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் தடியடி சம்பவத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஈஸ்வரியை கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார்.

    சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

    விசாரணையில் ஏ.டி. எஸ்.பி. பாண்டியராஜனிடம் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    சாமளாபுரம் பகுதியில் சம்பவத்தன்று எப்போது போராட்டம் தொடங்கியது? நீங்கள் எப்போது சென்றீர்கள்? பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?



    மேலும் தடியடி நடத்தும் அளவுக்கு அங்கு பதட்டமான நிலை இருந்ததா? உயர் அதிகாரியாக இருந்து கொண்டு ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தது ஏன்? என்பது போன்ற சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கேள்விகளை எல்லாம் சற்றும் எதிர்பார்க்காத ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் அனைத்துக்கும் பதில் அளித்ததாக தெரிகிறது.

    இந்த விசாரணை விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

    சாமளாபுரம் தடியடி சம்பவம் குறித்து வருவாய் துறையின் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

    இனி மாவட்ட வருவாய் அலுவலர் தனது, விசாரணையின் அறிக்கையை கலெக்டர் ஜெயந்தியிடம் விரைவில் ஒப்படைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×