search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

    சித்ரவதை செய்து சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தொடர்பாக தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் வசிக்கும் சரவணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் வாடகை வீட்டில், என் தாய், மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தேன். அங்கு ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில்களை செய்தேன். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கோவையில் பல சொத்துக்களை வாங்கினேன்.

    கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் என் நண்பர் வைத்திய லிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது, சீருடை இல்லாமல் இருந்த 7 போலீஸ் காரர்கள் எங்களை வழி மறித்து, போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

    திருமண மண்டபத்தில் நகைகளை திருடியதாக கூறி எங்களை தாக்கினார்கள். உதவி போலீஸ் கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணா, எங்களை சுபஸ்ரீ திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார். அப்போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்.

    பின்னர் கோவையில் உள்ள சக்தி லாட்ஜில் எங்களை அடைத்து வைத்து தாக்கினார்கள். பின்னர் என் வீட்டிற்கு அழைத்து சென்று, வீட்டில் இருந்த நகை, ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். என் மனைவி கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி, மகள் கழுத்தில் கிடந்த தங்க நகைகளை பறித்தார்கள்.

    நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டில் இருந்து எங்களது பொருட்கள் அனைத்தையும் வெளியில் வீசினார்கள். 10 நாட்கள் தனியார் லாட்ஜில் தங்க வைத்து என்னையும், என் நண்பனையும் அடித்து சித்ரவதை செய்தனர்.

    உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணா, காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் துப்பாக்கி முனையில் காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி என்னை அழைத்து சென்று, என் சொத்துக்களை ஷாஜகான் என்பவரது பெயரில் பத்திரப் பதிவு செய்தனர்.

    வயதான பெண்ணை கொலை செய்ததாக வெற்றுக் காகிதத்தில் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். காட்டூர் மற்றும் ரத்தினபுரி போலீஸ் நிலையங்களில் என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, மார்ச் 3-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளியில் வந்தேன். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கிறேன்.

    என்னை 10 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து அடித்து கொடுமை செய்து, என் சொத்துக்களை அபகரித்துக் கொண்ட உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணா, இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக உள் துறை செயலாளர், டி.ஜி.பி., கோவை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி உள்துறை செயலர், டி.ஜி.பி., கோவை போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

    Next Story
    ×