search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி புளியமரத்தில் மோதல்: 2 பேர் பலி
    X

    சேலத்தில் இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி புளியமரத்தில் மோதல்: 2 பேர் பலி

    சேலத்தில் இன்று அதிகாலை இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி புளியமரத்தில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலத்திற்கு இன்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் லாரி அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறு மாறாக ஓடியது.

    சிறிது நேரத்தில் அந்த லாரி சாலையில் வலது புறம் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் லாரியின் முன்பக்கம் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனை ஓட்டிய டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேலம் தெற்கு போக்குவரத்து புலானய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அன்ன தானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்கள். பின்னர் அவர்கள், பலியான டிரைவர் மற்றும் மாற்று டிரைவருடைய உடல்களை அங்கிருந்து மீட்க முயற்சி செய்தார்கள். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததால் அவர்களால் உடல்களை மீட்க முடிய வில்லை.

    இதனை தொடர்ந்து உடல்களை மீட்க செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் ஆகிய இருவருடைய உடல்களையும் அங்கிருந்து சுமார் 1 மணி நேரம் போராடி இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

    பின்னர் போலீசார், லாரியில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்து பார்த்த போது, இந்த லாரி வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வெங்கிலி கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    பலியான டிரைவர்கள் 2 பேரும் வெங்கிலி கிராமத்தை சேர்ந்த மகாதேவன் மகன் மணிகண்டன்(வயது 25), ஆம்பூர் சுகர்மில் பகுதியை சேர்ந்த தேவராஜ் (27) என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு விபத்து சம்பவம் குறித்து செல்போன் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் தணிகாசலத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து டிரைவர்கள் மணிகண்டன் மற்றும் தேவராஜ் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் அனைத்தும் அன்னதானப்பட்டி சந்தைப் பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இறக்குவதற்காக கொண்டு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

    லாரியில் இருந்த அந்த இரும்பு கம்பிகளை கீழே இறக்கி, தீயணைப்பு துறையினர் லாரியை அங்கிருந்து ஓரமாக அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே போக்குவரத்து சீரானது.

    இந்த கோர விபத்து சம்பவத்துக்கான முழு காரணங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×