search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கனூர் அருகே கவர்னருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள்
    X

    திருக்கனூர் அருகே கவர்னருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள்

    திருக்கனூர் அருகே அரசை செயல்பட விடாமல் முடக்கி வைக்கும் கவர்னருக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்ட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருக்கனூர்:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த மாதம் தொடக்கம் முதல் அவர் நீர்நிலைகளை பார்வையிட்டு அவற்றை பாதுகாக்கும் பணியை கவர்னர் கிரண்பேடி தொடங்கி உள்ளார்.

    அதுபோல் கடந்த சனிக்கிழமை வில்லியனூர் சங்கராபரணி ஆற்றை பார்வையிட்டார். பின்னர் பிரசித்தி பெற்ற வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மறுநாள் புதுவை வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவில் குளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி கோவில் குளங்களை பாதுகாக்கவும் மற்றும் குளத்து நீரை மறுசுழற்சி செய்யவும் கோவில் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை திருக்கனூர் அருகே காட்டேரி குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் மரியாதை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பணிகள் நடந்து வருவதை பார்வையிட்ட கவர்னர் கோவில் வரலாறு குறித்து கேட்டு அறிந்தார்.

    பின்னர் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள ஊர் பொது குளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களிடமும், ஊர் பொதுமக்களிடமும் குளத்தை நன்கு பராமரிக்கும்படி கேட்டு கொண்டார்.

    அங்கு ஊர் பொது மக்களிடம் அமர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்த வேளையில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் செந்தில்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகளும், காங்கிரஸ்- தி.மு.க. கட்சி பிரமுகர்களும் கவர்னருக்கு கறுப்பு கொடி காட்ட ஊர்வலமாக வந்தனர்.

    இதனை அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், காட்டேரி குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.

    அருகிலேயே போலீஸ் நிலையம் இருந்தும் அவர்களை போலீசார் அங்கு கொண்டு செல்லவில்லை. கவர்னரின் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது கவர்னரின் கார் போலீஸ் நிலையத்தை கடந்த போது கரும்பு விவசாயிகள் மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. பிரமுகர்கள் கவர்னரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.


    அரசை செயல்பட விடாமல் முடக்கி வைக்கும் கவர்னரே திரும்பி போ. விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திடாத கவர்னரே திரும்பி போ என கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×