search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பிதுரை-அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் செந்தில்பாலாஜி மனு
    X

    தம்பிதுரை-அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் செந்தில்பாலாஜி மனு

    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்ததால் தம்பிதுரை-அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி போலீசில் மனு அளித்துள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

    பின்னர் 19.1.2015-ல் அரசாணை வெளியிடப்பட்டு 2015 நவம்பர் மாதத்தில் ரூ.229.46 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்காக வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து 1.3.2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இடம் மாற்றப்பட்டு கரூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சணப்பிரட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எங்கும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

    இரு பகுதி மக்களும் தங்கள் பகுதியில் தான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் முதலில் அடிக்கல் நாட்டிய படி வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக வாங்கல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்குவதாகவும், முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சுதந்திர போராட்ட தியாகி காளியண்ணன் மற்றும் போராட்டக்குழுவினர் திரளாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த போராட்டத்தில் நேரடியாக செந்தில்பாலாஜி பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி கோரி போலீசிலும் செந்தில்பலாஜி புகார் மனு கொடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு ஒரு புகார் மனுவும் கொடுத்துள்ளார்.

    அதில் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைவதை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பாக குற்றஞ்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் அரசு எதிராக அவ்வப்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் போராட்டம் அரசியலில் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி தம்பிதுரையின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அரசு விழாக்கள் மற்றும் கட்சி பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் தம்பிதுரையை முன்னிலைப்படுத்தி வந்தார்.

    ஆனால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு நிகழ்வுக்கு பிறகு தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். கடந்த பொதுத்தேர்தலில் தொகுதி மாற்றப்பட்டு அரவக்குறிச்சியில் போட்டியிட்டார்.

    பணப்பட்டுவாடா புகாரின் பேரில் தேர்தல் தள்ளிப் போனாலும் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியில் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    அத்துடன் தம்பிதுரை, தற்போதைய கரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் அதிக நெருக்கம் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவர்களுக்கு எதிராக செந்தில் பாலாஜி திடீர் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    Next Story
    ×