search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைக்கு எதிரான போராட்டம்: ஏ.டி.எஸ்.பி. யால் தாக்கப்பட்ட பெண்ணிடம் இன்று விசாரணை
    X

    மதுக்கடைக்கு எதிரான போராட்டம்: ஏ.டி.எஸ்.பி. யால் தாக்கப்பட்ட பெண்ணிடம் இன்று விசாரணை

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் ஏ.டி.எஸ்.பி. யால் தாக்கப்பட்ட பெண்ணிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் கடந்த 11-ந் தேதி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் வந்த போலீசார், திடீரென போராட்டம் நடத்திய பெண்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    போலீஸ் அதிகாரி காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை தாக்கிய சம்ப வத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப் புகளும், பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித் தனர்.

    இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

    அதன்படி தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரிகளாக வருவாய் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மற்றும் காவல் துறை சார்பில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சாமளாபுரம் தடியடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தடியடி சம்பவத்தின் போது பணியில் இருந்த பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் விசாரித்தார்.

    இன்று (புதன்கிழமை) பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார்.

    இதையொட்டி ஏ.டி.எஸ்.பி. தாக்கியதில் காயம் அடைந்த ஈஸ்வரி, மற்றும் போலீசாரின் தடியடியில் காயம் அடைந்த சிவகணேசன், சிவசுப்பிரமணியம், நிகில் பிரணவ், அருண்குமார், விஜயா உள்பட 14 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.


    மேலும் தடியடி சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் 8 பேருக்கும் விசாரணைக்கு வரக்கோரி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று நடந்த விசாரணைக்கு தடியடியில் காயம் அடைந்த ஈஸ்வரி, சிவகணேசன் உள்பட மொத்தம் 22 பேரும் பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, காயம் அடைந்தவர்களிடம் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.ஏ.டி.எஸ்.பி. தாக்கியதில் காயம் அடைந்த ஈஸ்வரியிடம், டாஸ்மாக் போராட்டத்தில் எப்படி கலந்து கொண்டீருந்தீர்கள்? தடியடி சம்பவம் எப்படி தொடங்கியது? நீங்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினீர்களா? போன்ற கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

    இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    இதற்கிடையே தடியடி சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் போலீஸ் தரப்பில் சிறப்பு விசாரணை அதிகாரியான கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி மீண்டும் சாமளாபுரம் பகுதிக்கு நேற்று மாலை வந்தார். அப்போது தடியடியில் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி மற்றும் சிவகணேசன் ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார். விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

    இதுபற்றி எஸ்.பி.ரம்யா பாரதி கூறும் போது, ‘‘ சாமளாபுரம் தடியடி சம்பவம் பற்றி பொதுமக்கள் ஏதேனும் தகவல் தர விரும்பினால் என்னிடம் தெரிவிக்கலாம். அடுத்த கட்டமாக வருவாய்துறை, போலீசாரிடம் விசாரிக்கப்படும்’ என்றார்.

    Next Story
    ×