search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான 15 நாளில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருமணமான 15 நாளில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 15 நாளில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கலப்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மாலதி (வயது21). இவருக்கும் அந்த பகுதியில் உள்ள கொத்தாலி கிராமத்தை சேர்ந்த முப்பிடாதி (27) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முப்பிடாதி கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மாலதி, நெல்லையில் உள்ள ஒரு மருத்துவ பரிசோதனை மையத்தில் லேப்டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் புதுமண தம்பதிகள் இருவரும் நெல்லை அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மாலதி தினமும் அதிகாலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணி அளவில் வீடு திரும்புவார். முப்பிடாதிக்கு இரவு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இரவில் 8 மணி அளவில் வேலைக்கு சென்று விட்டு காலையில் தான் வீடு திரும்பி வந்துள்ளார்.

    திருமணமான சில நாட்களிலேயே மாலதி தனது கணவர் தன்னை விட குறைவாக படித்து, சிறிய வேலை பார்ப்பதால் தனக்கு பிடிக்கவில்லை என்று உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மாலதியை சமரசப்படுத்தி கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் மாலதிக்கு காலையில் வேலையும், முப்பிடாதிக்கு இரவிலும் வேலை தொடர்ந்து வந்ததால் புதுப்பெண்ணான மாலதி வாழ்க்கையில் வெறுப்படைந்தார். நேற்று அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டின் உட்புறமாக கதவை பூட்டி விட்டு உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முப்பிடாதி, வீடு பூட்டிக்கிடந்ததால் மனைவி மாலதி உள்பூட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டுக்குள் செல்ல முடியாமல் வெளியிலேயே படுத்து ஓய்வெடுத்துள்ளார்.

    நேற்று இரவு மீண்டும் வேலைக்கு போவதற்காக முப்பிடாதி புறப்பட்ட போது தான் சந்தேகப்பட்டு ஜன்னல் கதவை தள்ளி திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே மாலதி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மானூர் போலீசுக்கும், மாலதியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.

    இதுகுறித்து மாலதியின் தாயார் பாப்பா, மானூர் போலீசில் புகார் செய்துள்ளார். திருமணமாகி 15 நாட்களே ஆவதால் தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு மற்றும் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×