search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 110 டிகிரி கொளுத்தியது - வெயிலால் முதியோர், நோயாளிகளுக்கு வெப்ப வாதம் ஏற்படும் அபாயம்
    X

    வேலூரில் 110 டிகிரி கொளுத்தியது - வெயிலால் முதியோர், நோயாளிகளுக்கு வெப்ப வாதம் ஏற்படும் அபாயம்

    வேலூரில் வெயில் அதிகமாக வாட்டும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று வேலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகபட்சமாக நேற்று 110.3 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று பகலில் வீசிய அனல் காற்று பலரையும் அலறவைத்தது. திருவண்ணாமலையில் நேற்று 108 டிகிரி வெயில் அளவு பதிவானது. அங்கும் அனல்காற்று வீசியது.

    இது குறித்து வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் இன்று அகதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்றலைகள் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே, வெயில் அதிகமாக வாட்டும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.

    வேறு வழியின்றி பகல் நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அதாவது குடிநீர், குடையுடன் செல்லலாம். மேலும், வெளியே செல்லும் பொதுமக்கள் இளநீர், நீர்ச்சத்துள்ள பழ வகைகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெயில் தாக்கத்தால் சுய நினைவு இழந்து காணப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் சூட்டைக் குறைக்க அவர்கள் மீது குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும். குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு அதன் பிறகு அருகேயுள்ள மருத்துவ மனைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    முதியவர்கள், கூலித் தொழிலாளிகள், குறிப்பிட்ட மருந்துகளை தினமும் சாப்பிடுபவர்கள், இருதய நோயாளிகள் ஆகியோருக்கு வெப்ப வாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப வாதம் ஏற்படும்போது அதிக வியர்வை ஏற்படுதல், திடீர் மனநிலை மாற்றம், இதயத்துடிப்பு அதிகரித்தல், மயக்கம், தலைவலி ஆகியவை அறிகுறிகளாக ஏற்படும்.

    இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகும் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர், எலுமிச்சைச்சாறு, மோர், இளநீர் ஆகியவற்றைப் பருக வேண்டும். கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 வேளை குளிக்கலாம். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர், பிராணிகளை நிழல் பகுதியில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×