search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைக்கு எதிரான போராட்டம்: மதுபாட்டில்களை பாடைகட்டி எரித்தபோது பெண்கள் - சிறுவன் மீது தீப்பிடித்தது
    X

    மதுக்கடைக்கு எதிரான போராட்டம்: மதுபாட்டில்களை பாடைகட்டி எரித்தபோது பெண்கள் - சிறுவன் மீது தீப்பிடித்தது

    மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் மதுபாட்டில்களை பாடைகட்டி எரித்த போது 3 பெண்கள், சிறுவன் மீது தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில், பெரப்பேரி செல்லும் சாலையில் 13-ந்தேதி புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடை திறந்த அன்றே பொதுமக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் பொதுமக்களும், பா.ம.க.வினரும் டாஸ்மாக் கடையின் எதிரே பந்தல் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் செய்தும், உணவை பரிமாறி சாப்பிட்டும் முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    அப்போது 200-க்கும் மேற்பட்டோர் பாடைகட்டி அதில் பிணமாக கருதி மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்து கதறி அழுதும், பாடையை தூக்கி ஊர்வலமாக சென்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அந்தப் பாடையை கீழே வைத்து, அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பாடை குபீரெனத் தீப்பிடித்து எரிந்தபோது, அருகில் நின்றிருந்த சிறுவன் மற்றும் 3 பெண்களின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். 4 பேரும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்களும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி பை-பாஸ் ரோட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை விஜிலாபுரம் கிராமத்திற்கு மாற்றி அங்கு டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    இதனை அறிந்த பெரிய குரும்பதெரு, சின்னகுரும்பதெரு, வள்ளிப்பட்டு, பாலப்பனூர், பெத்தவேப்பம்பட்டு, சின்னவேப்பம்பட்டு ஆகிய கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக சேவகர் சிவா என்பவர் தலைமையில் டாஸ்மாக் கடையை திறக்ககூடாது என கடை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    பொதுமக்களின் போராட்டத்தை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×