search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 106 டிகிரி வெயில்: அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    மதுரையில் 106 டிகிரி வெயில்: அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி

    மதுரையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியதால் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
    மதுரை:

    வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பார்கள். கடந்த சில மாதங்களாக மதுரை பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் தற்போது வெயில் வாட்டி வதைப்பது பொதுமக்களை வெகுவாக பாதித்து உள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக மார்ச் மாதம் முதல் வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கும். படிப்படியாக கூடி மே மாதம் 100 டிகிரியை தாண்டும். அப்போது அக்னி நட்சத்திரம் வரும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே மே மாத வெயிலின் தாக்கம் ஏற்பட்டு இருப்பது பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கிறது.

    மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாகவே காணப்படுகிறது கடந்த 2 வருடங்களாக மழை இல்லாததால் பூமி வறண்டு காணப்படுவதாலும், பெரும்பாலான மரங்கள் பட்டுவிட்டதாலும் குளிர்ந்த காற்று வீசுவது குறைந்துள்ளது. மாறாக தற்போது அனல் காற்றுதான் அதிக அளவில் வீசி வருகிறது.

    இதனால் காலை 9 மணிக்கு மேல் வெளியில் செல்லவே முடியாத நிலை இருக்கிறது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.

    பஸ்சில் பயணம் செய்பவர்களும் அனல் காற்றால் அவதிப்படுகிறார்கள். பஸ்சின் சீட், கம்பிகள், கைப்பிடி கம்பிகள் எல்லாம் சூடாக இருப்பதால் பிடிக்கக் கூட முடியவில்லை.

    வெப்பக்காற்று வீச்சால் தாகம் அதிகரித்து ரோட்டோர கடைகளில் குளிர்பானம் குடிக்க கடைகளை நோக்கி பொது மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் இளநீர், பழக்கடை, ஜூஸ் கடைகள், தர்பூசனி கடை சர்பத் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    பகலில்தான் இந்த கொடுமை என்றால் இரவிலும் சரியாக தூங்க முடியாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. மின்விசிறி இருந்தும் அதில் இருந்து வரும் காற்றுகூட வெப்பமாக இருப்பதால் வியர்வை கொட்டி துங்க முடியாமல், பெண்கள், குழந்தைகள், முதியோர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இந்த வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளதால், இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகி றோமோ என அச்ச உணர்வுடனே பொதுமக்கள் இருக்கிறார்கள்.

    தற்போது நகர் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் இருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு குடம் தண்ணீர் எடுக்கக்கூட நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே கோடை வெயில் உச்சத்தை அடையும் முன்பே குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சிறுவர்கள் குளித்து மகிழ தோட்டத்தில் உள்ள பம்புசெட், கிணறுகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நகரத்தில் வசிக்கும் சிறுவர், மாணவர்கள் நீச்சல் குளத்தை நோக்கி சென்று பணம் கொடுத்து ஆனந்த குளியல் போட்டு வருகிறார்கள்.

    இந்த வெப்ப காற்று உடலை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக தோல் நோய் மற்றும் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். சுத்தமான கம்மங்கூழ், பழரசங்கள், மோர், தர்பூசனி, இளநீர் போன்றவற்றை அவ்வப்போது அருந்தி வந்தால் தோல் நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம் என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

    இன்று மதுரையில் வெயிலின் அளவு 106 டிகிரியாக இருந்தது. இது கடந்த வாரங்களை காட்டிலும் கூடுதலாகும். இந்த வெயிலால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
    Next Story
    ×