search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்த வாலிபர் கைது
    X

    வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்த வாலிபர் கைது

    வங்கியில் வேலை மற்றும் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடியே 82 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தாரமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). என்ஜினீயரான இவருக்கு கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.நகர், வித்யா காலனியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (30) என்பவர் அறிமுகமானார்.

    அப்போது சூர்யபிரகாஷ், வங்கியில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும் என்றும் மணிகண்டனிடம் கூறினார். அதை நம்பிய மணிகண்டன் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை சென்னை, தம்பு செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் வைத்து சூர்யபிரகாஷிடம் கொடுத்தார்.

    அந்த பணத்தை வாங்கிய சூர்யபிரகாஷ், சில நாட்களில் போலி பணி நியமன ஆணையை தயார் செய்து மணிகண்டனிடம் கொடுத்து ஏமாற்றி விட்டார். இந்த மோசடி குறித்து கடந்த 27-01-2015 அன்று முத்தையால்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சூர்யபிரகாசை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சூர்யபிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கைதான சூர்யபிரகாஷ், இதேபோல் மதுரை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகவும், கடன் வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் ரூ.1 கோடியே 82 லட்சம் வரை வாங்கி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    இவர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவிலும், மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையம் மற்றும் கோவை சிறுமுகை போலீஸ் நிலையத்திலும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கைதான சூர்யபிரகாஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×