search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. என்று கூறி மெட்ரிக். சான்றிதழ் - தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
    X

    சி.பி.எஸ்.இ. என்று கூறி மெட்ரிக். சான்றிதழ் - தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

    சென்னை கொடுங்கையூரில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்று கூறி மெட்ரிக்குலேசன் பள்ளி சான்றிதழ் வழங்கியதால் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
    பெரம்பூர்:

    சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6-வது பிளாக்கில் ‘வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல்’ என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிரிகேஜி முதல் 7-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் சுமார் 1,400 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பாடம் நடத்தப்படுவதாக கூறி சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு நிகராக பெற்றோர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்று குறிப்பிடாமல் மெட்ரிக்குலேசன் பள்ளி என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாக அதிகாரி தேவராஜிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு அவர், பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவதாகவும், விரைவில் சி.பி.எஸ்.இ.யாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், நேற்று அந்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அன்பழகன், கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் தங்களுக்கு இதில் முடிவு தெரியாமல் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி பெற்றோர்கள் அனைவரும் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து, வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருக்கும், எம்.எல்.ஏ. உடன் வந்த அவரது ஆதரவாளர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், பெற்றோர்கள் சிலரை சரமாரியாக தாக்கினர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர். இதனால் தனியார் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளி நிர்வாகத்திடம் பேசிய பிறகு வெளியே வந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் கூறும்போது, “பள்ளியின் தரம் உயர்த்தப்படவில்லை. வரும் காலங்களிலும் சி.பி.எஸ்.இ.யாக தரம் உயர்த்தப்படாது. அதற்கான ஆசிரியர்களும் பள்ளியில் இல்லை. மெட்ரிக்குலேசன் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் உள்ளனர். இங்கு படிக்கும் உங்கள் குழந்தைகளை மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இதே பள்ளியில் மெட்ரிக்குலேசன் படிப்பு படிக்கலாம். இதற்காக கட்டணத்தை குறைத்துக்கொள்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்து உள்ளது” என்றார்.

    இதுபற்றி பெற்றோர்கள் கூறும்போது, “பள்ளி நிர்வாகத்தை நம்பி கூடுதல் கட்டணம் கட்டி எங்கள் குழந்தைகளை சேர்த்தோம். இப்போது சி.பி.எஸ்.இ. பள்ளி இல்லை என்று கூறுகின்றனர். இதை தட்டிக்கேட்டால் எங்கள் பிள்ளைகள் முன்பாகவே எங்களை ஆள் வைத்து தாக்குகின்றனர். போலீசாரும் ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
    Next Story
    ×