search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்ட அரசு கார்.
    X
    டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்ட அரசு கார்.

    புதுவை காங். ஆட்சியை பாராட்டிய எதிர்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு அரசு கார்

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாராட்டி பேசிய பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான செல்வத்துக்கு அரசு சார்பில் இனோவா கார் வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் கடந்த சில மாதமாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    சட்டசபை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    ஆனால், டி.பி.ஆர். செல்வம் மட்டும் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்று பேசினார். இதே போல கவர்னருக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது.

    இந்த கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணித்தது. ஆனால், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. இந்த கூட்டத்தில் பங்கேற்று தன் கருத்துக்களை தெரிவித்து பேசினார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்காரெட்டிபாளையம் பாண்கோஸ் பள்ளியில் நடந்த அரசு விழாவில் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்றார். அப்போது அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் காங்கிரஸ் அரசை பாராட்டியும், கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசை விமர்சித்தும் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாராட்டி பேசிய பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான செல்வத்துக்கு அரசு சார்பில் இனோவா கார் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் துணை சபாநாயகராக டி.பி.ஆர். செல்வம் இருந்தபோது அவர் பயன்படுத்திய பி.ஒய்.01 பி.சி. 7777 என்ற பதிவெண் கொண்ட அதே இனோவா கார் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

    காங்கிரஸ் அரசை பாராட்டி பேசியதற்கான பரிசாக இது வழங்கப்பட்டதாக தெரிகிறது. வரும் காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் வரிசையில் இருந்து கொண்டு டி.பி.ஆர். செல்வம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும் தெரிகிறது.
    Next Story
    ×