search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை கலைக்க கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
    X

    தமிழக அரசை கலைக்க கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

    அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்தியதால், தமிழக அரசை கலைக்க கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக ஒரு மனுவை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்தார். அதில், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா சரளமாக நடக்கிறது. தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

    இதை தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பெரும் தொகையையும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆதார ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்.

    மேலும் அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்தியதால், தமிழக அரசை இந்திய அரசியல் சட்டம் 356ன் கீழ் கலைக்க இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 192(2)ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. என்று கூறியிருந்தார்.

    இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று நடுஇரவில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கருத்து தெரிவித்தனர்.

    அதற்கு டிராபிக் ராமசாமியின் சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்த், ‘தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும், கூடுதல் மனுவில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர் கூறியுள்ளார்.

    எனவே, அதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘உங்களது முக்கிய கோரிக்கை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது தானே? தற்போது தேர்தலே ரத்து செய்யப்பட்ட பின்னர் எப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியும்’ என்று கூறினர்.

    இதையடுத்து டிராபிக் ராமசாமியின் வக்கீல், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×