search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறட்சியால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகியது - ரூ.250 கோடி அன்னிய செலாவணி இழப்பு
    X

    வறட்சியால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகியது - ரூ.250 கோடி அன்னிய செலாவணி இழப்பு

    கோவை மாவட்ட சுற்றுப்பகுதியில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து போனதால் 250 கோடி வரை அன்னியசெலாவணி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் 1 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு மேல் தென்னை மரங்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பிற பகுதி தமிழகத்தின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 70 சதவீதம் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து தான் கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றிவிட்டதால் தற்போது, பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள தென்னை மரங்களில் 40 சதவீதம் மரங்கள் முழுமையாக காய்ப்பு திறனை இழந்து வறட்சியை தாக்கு பிடிக்காமல் காய்ந்துவிட்டது. மீதமுள்ள 60 சதவீதம் மரங்கள் உயிருடன் மட்டுமே இருக்கிறது. ஆனால், தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காய்ப்பு திறன் குறைந்துவிட்டது.

    நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காய்ந்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்தியும் வருகின்றனர். மரத்தை வெட்டி அகற்றக்கூட பணம் இல்லாத விவசாயிகள் மரத்தை அப்படியே விட்டுவிட்டனர்.

    உயிருடன் உள்ள தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைந்துவிட்டாலும், அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் சில விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். லாரிகளில் தண்ணீர் வாங்கி ஊற்றினாலும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் ஊற்றிய சில மணி நேரங்களிலேயே அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றியதற்கான அடையாளம் தெரியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது.

    நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் ஒரு முறை காய்ந்துவிட்டால், மீண்டும் அதை கன்றாக நடவு செய்து மரமாக மாற்றி காய்ப்பு திறன் கொண்டு வருவதற்கு 6 முதல் 9 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் விவசாயிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

    வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்தும், உயிருடன் இருக்கும் தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்தும் விட்டதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை நார் மற்றும் தென்னை நார் கழிவுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேங்காய் மட்டை கிடைக்காமல் தொழில் பாதிப்படைந்துள்ளது.

    தென்னை மட்டைகளின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது, 1000 தென்னை மட்டை 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வழக்கமான விலையை விட 30 சதவீதம் இந்த விலை அதிகமாகும். 1000 தென்னை மட்டைகளில் இருந்து 100 கிலோ தென்னை நார் கிடைக்கும். ஆனால், தற்போது வறட்சியில் சிக்கிய தென்னை மரங்களில் இருந்து வரும் தேங்காய்களின் தென்னை மட்டைகளில் 70 கிலோ தென்னை நார் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 30 சதவீதம் நார் உற்பத்தி குறைகிறது. தென்னை நார் மற்றும் காயர் பித் எனப்படும் தென்னை நார்கழிவு கட்டிகள் பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏற்றுமதி 20 முதல் 25 சதவீதம் வரை குறை வாய்ப்புள்ளது. இதனால், இந்த ஆண்டு 200 முதல் 250 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    தென்னை மரங்கள் பாதிப்பால், விவசாயக் கூலிகள், தென்னை சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட வந்த தேங்காய் போடுபவர்கள், உரிப்பவர்கள், லோடு மேன்கள், தேங்காய் மற்றும் தென்னை நார்களை இடமாற்றம் செய்யும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், உதவியாளர்கள், தென்னை நார் தொழிற்சாலை பணியாளர்கள், கயிறு உற்பத்தியாளர்கள் என தென்னை சார் தொழில் செய்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    இப்படி வறட்சியால் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளதால், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு அன்னிய செலாவணி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கவுதமன் கூறியதாவது:

    மழைப்பொழிவு குறைந்து வறட்சியால் 35 முதல் 40 சதவீதம் தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. உயிருள்ள தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைந்துவிட்டது. இதனால், தென்னை சார்பு தொழிலான தென்னை நார் உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் பாதிப்படைந்துள்ளது.

    தென்னைநார் மற்றும் காயர்பித் ஆகியவை பொள்ளாச்சியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ.1000 கோடி அந்நியசெலாவணி கிடைக்கும். இந்த ஆண்டு 25 சதவீதம் ஏற்றுமதி குறைந்து ரூ.750 கோடி வரை மட்டுமே ஏற்றுமதி நடைபெறும் வாய்ப்புள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து போனதால் 250 கோடி வரை அன்னியசெலாவணி இழப்பு ஏற்படும். ஆகவே விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு அரசின் உதவி அவசியம். தென்னை ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு 2 சதவீதம் சலுகை வழங்குவது போல் உற்பத்தியாளர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×