search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்களை விடுவிக்காவிட்டால் ரெயில் மறியல் போராட்டம்: சமூகவலைதள நண்பர்கள் குழு
    X

    மீனவர்களை விடுவிக்காவிட்டால் ரெயில் மறியல் போராட்டம்: சமூகவலைதள நண்பர்கள் குழு

    இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்களை விடுவிக்காவிட்டால் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக சமூகவலைதள நண்பர்கள் குழு அறிவித்துள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேட்டை சேர்ந்த கஜேந்திரன் உள்பட 6 பேர் கடந்த 1-ந் தேதி காரைக்காலில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

    கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த 6-ந் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கால வரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று முன் தினம் முதல் காரைக்கால் கடற்கரை சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே அறவழிப் போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இலங்கை அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அரசலாற்றில் கருப்புக் கொடியுடன் பைபர் படகுகளை கொண்டு வந்து நிறுத்தினர்.

    போராட்டம் நடைபெற்ற இடத்திலும் ரோட்டில் கருப்புக் கொடிகளுடன் கட்டுமரங்களை கொண்டு வந்து நிறுத்தினர். நேற்று விடிய விடிய போராட்டம் நடந்தது.

    இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதள நண்பர்கள் குழுவை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது:-

    காரைக்கால் மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை அரசு பொய்வழக்கு போட்டுள்ளது.

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 மீனவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.

    எனவே மத்திய-மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் துரித நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் மீட்டுத்தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மீனவர்கள் கூறும்போது அடுத்தகட்டமாக ரெயில் மறியல் மற்றும் பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
    Next Story
    ×