search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் வறட்சியால் நீர்வரத்து இல்லை: சேர்வலாறு அணை மூடப்படும் அபாயம்
    X

    கடும் வறட்சியால் நீர்வரத்து இல்லை: சேர்வலாறு அணை மூடப்படும் அபாயம்

    மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் சேர்வலாறு அணை ஓரிரு நாளில் மூடப்படும் எனத் தெரிகிறது.
    நெல்லை:

    வடகிழக்குப் பருவமழை பொய்த்த காரணத்தால் நெல்லை மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. பிசான சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைந்து வரும் சூழலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.



    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 46.05 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 22.05 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 46.12 அடியாகவும் இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. மணிமுத்தாறு அணைக்கு மட்டும் விநாடிக்கு 23 கனஅடி நீர்வரத்து உள்ளது. பாபநாசம் உள்ளிட்ட பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இச்சூழலில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 5 அடி வீதம் குறைந்து வருவதால் அணை ஓரிரு நாளில் மூடப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடனாநதி அணை 56.10 அடி, ராமநதி அணை 39.63 அடி, கருப்பாநதி அணை 40.84 அடி, குண்டாறு அணை 20.12 அடி, அடவிநயினார் அணை 49.50 அடி, வடக்குப்பச்சையாறு அணை 3.25 அடி, நம்பியாறு அணை 8.07 அடி, கொடுமுடியாறு அணை 2.50 அடி.

    அணைகளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணியில் நீர்வரத்து இல்லை. குடிநீர் திட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்காத சூழலில் கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கரீம்நகர், ஹாஜிரா நகர், ஹாமீம்புரம், ராஜாநகர் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×