search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி பெண் கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 11 பேர் விடுவிப்பு
    X

    ஜெர்மனி பெண் கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 11 பேர் விடுவிப்பு

    ஜெர்மனி பெண் கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், உண்மை குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்துக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்பவர் சுற்றுலா வந்தார். அப்போது மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் கடலில் குளித்து விட்டு ஓய்வு எடுத்தபோது, மர்மநபர்கள் 2 பேர் ஜெசீனாவை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    நேற்றுமுன்தினம் காலை புதுஇடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம் மற்றும் காலனி, சூளேரிக்காட்டு குப்பம், நெம்மேலி குப்பம் பகுதியை சேர்ந்த 11 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். விசாரணைக்குப்பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பட்டிபுலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டிபுலம் ஊராட்சி பகுதியில் உள்ள கடற்கரையில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் இதுவரை நடந்தது கிடையாது. இந்த கற்பழிப்பு சம்பவம் எங்களை மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கி உள்ளது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க பட்டிபுலம் ஊராட்சி மக்கள் போலீசுக்கு மிக்க உறுதுணையாக இருப்போம் என்றார்.

    தனிப்படை போலீசார் காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு வழிப்பறி, கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் விவரங்களை திரட்டி வருகின்றனர்.

    மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தனித்தனி குழுக்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காததால் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், அங்கு சூரியக்குளியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் வந்து சவுக்கு தோப்பில் உள்ள மறைவிடங்களில் காதல் ஜோடிகள் உல்லாசம் அனுபவிப்பதாகவும், சில்மிஷ நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடிகளை நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். அதையும் மீறி சவுக்கு தோப்புக்குள் புகுந்த ஜோடிகளை பிடித்து எச்சரித்தனர்.

    துப்பட்டாவால் முகத்தை மூடி வந்த இளம்பெண்களிடம் முட்டுக்காடு சோதனை சாவடி மையத்தில் போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விடுவோம் என்று மிரட்டி பணம் பறித்ததாகவும் மாமல்லபுரம் வந்த சில ஜோடிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×