search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி பெண் கற்பழிப்பு: 11 பேரை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார்
    X

    ஜெர்மனி பெண் கற்பழிப்பு: 11 பேரை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார்

    ஜெர்மன் நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் 11 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற பெண் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதி மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த 2 மர்ம நபர்கள் அந்த பெண்ணை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கத்திமுனையில் கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பட்டிபுலம் காலனி, மீனவர் குப்பம், புது இடையூர்குப்பம், நெம்மேலிகுப்பம், சூளேரிக்காட்டுகுப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளார்களா? என போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் வீடு, வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    சந்தேகத்தின்பேரில் இந்த பகுதிகளை சேர்ந்த 11 பேரை விசாரணைக்காக போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எங்கேயோ பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை விட்டுவிட்டு விசாரணை என்ற பெயரில் வீட்டில் படுத்து இருந்த மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களையும், படிக்கும் மாணவர்களையும் பிடித்துச் செல்வதாக கூறி பட்டிபுலம் குப்பம் மற்றும் புது இடையூர்குப்பம் பகுதி மீனவ பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு போலீசார் விசாரணைக்காகத் தான் அழைத்துச் செல்கிறோமே தவிர குற்றவாளி என முடிவு செய்யவில்லை என்றும், விசாரித்த பிறகு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்றும் கூறினர். ஆனாலும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் 11 பேரையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் அவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். போலீசார் 11 பேரிடமும் சந்தேக நபர்கள் யாராவது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரை பகுதிகளில் நடமாடினார்களா? என்று விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ளார். விசாரணை நடத்திய 11 பேரின் புகைப்படங்களை போலீசார் அடையாளம் காண்பதற்காக அந்த பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பிவைத்தனர். அந்த பெண் அவர்கள் இல்லை என்று கூறிவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவம் நடந்தபோது பட்டிபுலம் கடற்கரை பகுதி பங்களா ஒன்றில் மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும், அதில் சென்னையில் இருந்து வந்த ஏராளமான வாலிபர்கள் கலந்துகொண்டு போதையில் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது. அதில் கலந்துகொண்ட வாலிபர்கள் யாராவது இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடந்த சவுக்கு தோப்பு பகுதியில் போலீசார் தடயம் ஏதாவது கிடைக்கிறதா? என ஆராய்ந்தபோது 2 ஆணுறைகள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. எனவே குற்றவாளிகள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக ஆணுறை அணிந்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    உள்ளூர் நபர்கள் இதுவரை இதுபோன்ற கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது இல்லை என்றும், சென்னை அல்லது வெளிமாவட்ட நபர்கள் யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மன் பெண் தெரிவித்த அங்க அடையாளங்களை கொண்டு போலீசார் வரைந்த கம்ப்யூட்டர் மாதிரி வரைபடத்தை வைத்து போலீசார் விசாரித்ததில் இதுவரை எந்த வித துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×