search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் கோரிக்கையை மத்திய -மாநில அரசுகள் ஏற்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன் பேட்டி
    X

    விவசாயிகள் கோரிக்கையை மத்திய -மாநில அரசுகள் ஏற்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன் பேட்டி

    விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொச்சைப்படுத்துகிறது என்று தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் இன்று விவசாயிகள் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.

    டெல்லியில் கடந்த 22 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களை மத்திய அரசு இன்னும் சந்தித்து பேசவில்லை. தேசிய நதி நீர் ஆணையம் அமைப்போம் என்று மத்திய மந்திரி உமாபாரதி அறிவித்து உள்ளார் அதனை திரும்ப பெற வேண்டும்.

    விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளை எந்த மத்திய மந்திரிகளும் சந்தித்து பேசவில்லை.

    தஞ்சையில் விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை மத்திய மந்திரி, தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசாதது கண்டிக்கத்தக்கது.

    விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொச்சைப்படுத்துகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று தஞ்சை வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அவர்கள் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து இருந்தோம். நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளான வருகிற 6-ந் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் 7-ந் தேதி முதல் 200 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக லட்சக்கணக்கானோர் உயிரை மாய்த்து கொள்ளவும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து இசை கலைஞர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இசை நிகழ்ச்சி நடத்தி சென்றனர்.

    Next Story
    ×