search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை டவுன்ஹால் பகுதியில் மறியல் போராட்டம் செய்த இளைஞர்கள் - பெண்கள்.
    X
    கோவை டவுன்ஹால் பகுதியில் மறியல் போராட்டம் செய்த இளைஞர்கள் - பெண்கள்.

    கோவையில் 2-வது நாளாக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்: 25 பேர் கைது

    கோவையில் 2-வது நாளாக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியதை போல டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இதை உறுதி செய்யும் வகையில் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதலே கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மைதானத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    எனினும் நேற்று மதியம் 1 மணி அளவில் இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் இளைஞர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால் வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதேபோல ரேஸ்கோர்ஸ் மற்றும் கொடிசியா மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே தீவிர கண்காணிப்பையும் மீறி இன்று காலை 2-வது நாளாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 25 பேர் கோவை டவுன்ஸால் அருகில் உள்ள கோனியம்மன் கோவில் முன்பு அமர்ந்து சாலைமறியிலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இளைஞர்கள் சாலைமறியலால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்ததும் கோவை போலீஸ் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டம் நடத்திய இளைஞர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

    ஆனால் இளைஞர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நீண்ட போராட்டத்துக்கு பின்னர் நித்யா, ராஜலட்சுமி, காவ்யா, மனோஜ், விஜய் உள்பட 25 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×