search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு வாழ்க்கை வாழ ஆசைபட்டு திருடினேன்: கைதான கேஷியர் வாக்குமூலம்
    X

    சொகுசு வாழ்க்கை வாழ ஆசைபட்டு திருடினேன்: கைதான கேஷியர் வாக்குமூலம்

    சொகுசு வாழ்க்கை வாழ ஆசைபட்டு திருடினேன் என்று வேலூர் வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளையடித்து கைதான கேஷியர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சென்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை இரவிலும் இயங்கும் வங்கியாகும். இங்கு நேற்று முன்தினம் பகலில் கேஷியராக இருந்த ரவிராமன் என்பவர் ஆஸ்பத்திரி கவுண்டரில் வசூலித்த பணம் ரூ.24,22,825-ஐ வங்கி பண பெட்டியில் வைத்து விட்டு சென்றுவிட்டார்.

    இரவு பணிக்கு வந்த காசாளர் நாகராஜ் வசூலித்த தொகையை வைக்க இரவு 12 மணிக்கு சென்ற போது கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணத்தில் ரூ.22 லட்சம் காணவில்லை என்றும் அறையில் வெண்டிலேட்டர் கம்பியை வளைத்து பணத்தை மர்ம கும்பல் திருடிசென்று விட்டதாகவும் கூறினார். இது பற்றி வங்கி மேலாளர் அஸ்வின் வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியம் மேற்பார்வையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வங்கியில் 3 வேளைகளிலும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் வரவழைத்து அவர்களுடைய கை ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் சேகரித்த கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் வங்கி கேஷியர் நாகராஜ் கை ரேகையும், கொள்ளை நடந்த இடத்தில் பீரோ, லாக்கர் ஆகியவற்றில் பதிவாகியிருந்த கைரேகையும் ஒன்றாக இருந்தது.

    அதைத்தொடர்ந்து வங்கி பணத்தை கொள்ளையடித்தது கேஷியர் நாகராஜ் என்பதை போலீசார் உறுதி செய்து அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னை ராயபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை சின்னயா சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக உள்ளார்.

    ராணி என்ற மனைவி 4 மாத பெண் குழந்தை உள்ளது. நான் படித்து முடித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பின்னர் எல்.ஐ.சி.யில் வேலை செய்தேன்.

    2013-ம் ஆண்டு மவுண்ட்ரோட்டில் உள்ள சென்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பியூன் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வங்கி கிளையில் கேஷியராக பணியில் சேர்ந்தேன். தினமும் ரெயிலில் பணிக்கு வந்து சென்றேன்.

    சென்னையில் வசதியாக வாழ வேண்டுமென்ற ஆசை எனக்கு கனவாக இருந்தது. சி.எம்.சி. கிளை வங்கி 24 மணிநேரமும் செயல்படும் வங்கியாகும். இரவில் வைக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு காத்திருந்தேன் .

    28-ந் தேதி மதியம் 1 மணிக்கு வங்கி ஊழியர் வெங்கடேசன் 69 லட்சத்துக்கு 22 ஆயிரத்து 409 ரூபாயை லாக்கரில் வைத்து பூட்டினார் சாவியை அவரே எடுத்த சென்று விட்டார்.

    இரவில் நானும் செக்யூரிட்டி முருகனும் பணியில் இருந்தோம். கேஷியர் ரவிராமன் மாலையில் வசூலான பணத்தை மற்றொரு லாக்கரில் வைத்துவிட்டு சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

    இரவு 8 மணிக்கு செக்யூரிட்டி முருகனை தூரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வருமாறு அனுப்பினேன். அவர் சென்றதும் வங்கியில் கொள்ளை நடந்தது போல நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தேன்.

    ரவிராமன் வைத்து விட்டு சென்ற பணத்தில் ரூ.22 லட்சத்தை ஒரு பையில் வைத்து பக்கத்து அறையில் மறைத்து வைத்தேன்.

    லாக்கர் அறையில் இருந்த வெண்டிலேட்டர் கம்பியை கைகளால் வளைத்து விட்டு எதுவும் தெரியாதது போல அமைதியாக இருந்தேன். செக்யூரிட்டி வந்ததும் மீண்டும் லாக்கர் அறைக்கு சென்றேன். அங்கிருந்த பணம் கொள்ளை போனதாக கூறி நாடகத்தை அரங்கேற்றினேன்.

    ரூ.22 லட்சத்தை வைத்து சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு இருந்தேன். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் எழுந்தது. கிடுக்கிபிடி விசாரணையில் நான் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    கேஷியர் நாகராஜை கைது செய்து அவர் மறைத்து வைத்திருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான நாகராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×