search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலைய 2-வது யூனிட் திடீர் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    தூத்துக்குடி அனல்மின் நிலைய 2-வது யூனிட் திடீர் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல்மின் நிலைய 2-வது மின் உற்பத்தி எந்திர பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் மாதம் அனல்மின் நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. அதன் பிறகு தொடர்ச்சியாக பழுது மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தி எந்திரங்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டன. அனைத்து எந்திரங்களும் ஒரே நேரத்தில் முழுமையாக இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் புதிய தலைமை என்ஜினீயராக நடராஜன் பொறுப்பேற்றார். அதன் பிறகு படிப்படியாக மின் உற்பத்தி எந்திரங்கள் பழுது நீக்கம் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு எந்திரமாக இயக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது மின் உற்பத்தி எந்திரத்தை தவிர 4 எந்திரங்களும் இயங்கி வந்தன.

    கடந்த 27-ந்தேதி 2-வது மின்சார உற்பத்தி எந்திரமும் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அனல்மின் நிலையத்தில் உள்ள 5 எந்திரங்களும் இயக்கப்பட்டு முழுமையாக மின்சார உற்பத்தி நடந்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை 2-வது மின் உற்பத்தி எந்திர பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. 2-வது மின் உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரிபார்க்கும் பணியில் பொறியாளர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×