search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’: வெடிகுண்டு பீதி
    X

    தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’: வெடிகுண்டு பீதி

    தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’ ஒன்றில் இருந்து புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையம் இன்று காலை 7.30 மணியளவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளம் அருகே கறுப்பு நிற ‘மர்ம பை’ (பேக்) கிடந்தது. அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

    அதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் அடைந்தனர். உடனே இது குறித்து சிட்லப்பாக்கம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். புகை வெளியான மர்ம பை பாதி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே வயர் இணைப்புடன் கூடிய பேட்டரி இருந்தது. எனவே இது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பீதி வலுப்பெற்றது.

    எனவே, தாம்பரம்- கடற்கரை மற்றும் கடற்கரை- தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்களின் போக்குவரத்து சுமார் 20 நிமிட நேரம் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே எழும்பூர் ரெயில் நிலைய உயர் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பின் தண்டவாளத்தில் கிடந்த ‘மர்ம பை’ எடுக்கப்பட்டது.

    பின்னர் அது தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திறந்து பார்க்கப்பட்டது. அது வெடிகுண்டு அல்ல என உறுதி செய்யப்பட்டது. மாறாக அதில் 3 வோல்ட் கொண்ட 300 பேட்டரிகள் வயர் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. அவை ‘பவர் பேங்’க்கு பயன்படுத்துபவை.

    இவை வெடிக்கும் திறன் கொண்டது அல்ல என நிபுணர்கள் உறுதி செய்தனர். இவற்றை ‘லேப்டாப்’ உபயோகிக்க பயன்படுத்தி இருக்கலாம். அல்லது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திட்ட செயலாக்கத்துக்கு (புராஜக்டுக்கு) இதை உபயோகித்து இருக்கலாம்.

    இதை ‘பை’யினுள் வைத்து எடுத்து சென்ற போது மின் கசிவு காரணமாக புகை வெளியாகி இருக்கலாம். இதனால் அது வெடித்து விடும் என கருதி தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இருந்தாலும் இந்த பேட்டரியை எடுத்து சென்றது யார்? அது எப்படி இங்கு வந்தது என தெரியவில்லை. அது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரப் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×