search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது: மாணவிகள் கருத்து
    X

    பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது: மாணவிகள் கருத்து

    பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. முக்கிய தேர்வான கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

    கணித தேர்வில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதானவையாக இருந்தன. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கொடுக்கப்பட்டிருந்தன. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்தது.

    அந்த கேள்வி பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. அதனால் நாங்கள் பெரும்பாலானவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. 10 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிமையாகத்தான் இருந்தன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எடுத்த மாணவர்களுக்கு நேற்றுடன் பிளஸ்-2 தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்ததையொட்டி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடி பூசி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். உயிரியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் எடுத்த மாணவர்களுக்கு 31-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

    கணிதத்தேர்வில் காப்பி அடித்ததாக 6 பேரும், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்ததாக 14 பேரும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், சேலம், கடலூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் என அந்த 20 பேரும் பிடிபட்டனர். 
    Next Story
    ×