search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500, 1000 ரூபாய் நோட்டுடன் வந்த மூதாட்டி: கைது நடவடிக்கை பாய்கிறதா?
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500, 1000 ரூபாய் நோட்டுடன் வந்த மூதாட்டி: கைது நடவடிக்கை பாய்கிறதா?

    வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் மூதாட்டி மனு கொடுக்க வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒடுகத்தூர் கீரை குட்டையை சேர்ந்தவர் நாராயணன் மனைவி கமலாம்மாள் (வயது 80). ஆதரவற்றவர். கீரை வியாபாரம் செய்து பிழைக்கிறார். கமலாம்மாள் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தார்.

    கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்றார். கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மூதாட்டியை தடுத்து நிறுத்தி என்னவென்று? விசாரித்தனர். செல்லாத நோட்டுகளை அதிகாரிகள் முன்பு கையில் எடுத்து வைத்து கொண்டு மூதாட்டி கூறியதாவது:-

    எனது கணவர் இறந்து விட்டார். ஆதரவின்றி தவிக்கிறேன். கீரை விற்று சிறுகு, சிறுகாக ரூ.8 ஆயிரம் பணத்தை சேர்த்து வைத்து இருந்தேன். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பது எனக்கு தற்போது தான் தெரியவந்தது. அந்த பணத்துடன் காலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்றேன்.

    வங்கி ஊழியர்கள் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுக்க மறுத்து விட்டனர். கலெக்டரை சந்தித்து மாற்றிச் செல்லலாம் என வந்தேன். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனு எழுதி கொடுப்பவரிடம் கூறினேன். அவர் மூலம் கலெக்டருக்கு மனு எழுதி வந்தேன். பணத்தை மாற்றி கொடுங்கள் என்றுக்கூறி கைகூப்பி கெஞ்சினார்.

    இதையடுத்து மூதாட்டி கமலாம்மாளை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. எனவே, பழைய நோட்டு வைத்திருந்தால் சட்டப்படி குற்றமாகும்.

    அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்த மூதாட்டி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூதாட்டி மீது குற்ற வழக்கு பதியப்படுமா? அல்லது பணத்தை மாற்றிக் கொடுத்து விடுவிக்கப்படுவாரா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

    Next Story
    ×