search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

    கிருஷ்ணா நீர் வரத்து முழுவதுமாக நின்று விட்டதால் நேற்று முதல் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஜனவரி 9-ந் தேதி திறக்கபட்ட தண்ணீர் 21-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    கண்டலேறு அணை வறண்டதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப் படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு தண்ணீர் வரத்து முழவதுமாக நின்று போனது.

    பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ‘லிங்க்’ கால்வாய் மூலமாக இத்தனை நாட்களாக வினாடிக்கு 380 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    கிருஷ்ணா நீர் வரத்து முழுவதுமாக நின்று விட்டதால் நேற்று மதியம் முதல் லிங்க் கால்வாயில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேபி கால்வாய் மூலம் சென்னை மெட்ரோ வாட்டர் போர்ட்டுக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுவரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2.227 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 20.95 அடியாக பதிவானது. வெறும் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்ட நிலையில் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 17 அடிக்கு குறைந்தால் தண்ணீர் வெளியேற்றம் சாத்தியமாகாது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 512 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. ஏரியில் 3645 மில்லியன் கனஅடி சேமித்து வைக்கலாம். குடிநீர் தேவைக்காக 76 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 479 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த தண்ணீரை கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதனால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
    Next Story
    ×