search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

    மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி ராமன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 34). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் குருசாமிபாளையம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்த கலா (28) என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிரி (11) என்ற மகனும், விஜயஸ்ரீ (8) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சண்முகம் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந் தேதி ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கலா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி உள்ளார். அப்போது ராஜா, தீக்குச்சியை கொளுத்தி கலா மீது போட்டு உள்ளார்.

    இதில் பலத்த தீக்காயம் அடைந்த கலா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கலாவின் தந்தை நல்லசிவம் (53) வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி இளங்கோ குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜா, போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் ராஜாவின் மகள் விஜயஸ்ரீ முக்கிய சாட்சியாக இருந்ததாக அரசு தரப்பு வக்கீல் சுசீலா கூறினார்.
    Next Story
    ×