search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாடுகளுக்கு தீவனமாக முருங்கைக்காய்கள் போடப்பட்டுள்ள படம்.
    X
    மாடுகளுக்கு தீவனமாக முருங்கைக்காய்கள் போடப்பட்டுள்ள படம்.

    ஆடு, மாடுகளுக்கு தீவனமாகும் முருங்கைக்காய்: திசையன்விளையில் விவசாயிகள் வேதனை

    திசையன்விளை மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் பலரும் முருங்கைக்காய்களை வாங்கி, ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகிவிளை, மருதநாச்சி விளை, அச்சம்பாடு, நாடார் அச்சம்பாடு, முதுமத்தான் மொழி, நடுவக்குறிச்சி, ஆணைகுடி, இடையன்குடி, உவரி உள்ளிட்ட பகுதிகளில் முன்பு தென்னந்தோப்புகள் அதிக அளவில் இருந்தன.

    மழை குறைந்த நிலையில், பெரும்பாலான விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் இறங்கினர். இந்த பகுதியில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அழகி, குரூஸ், பிஏ தானியல், கோபால்துரை போன்ற பல ரக செடி மற்றும் மர முருங்கைக்காய்கள் விளைச்சல் செய்யப்படுகின்றன.

    இதில் கோபால்துரை ரக முருங்கைக்காய்கள் அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், திசையன்விளை முருங்கைக்காய் மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்வது வழக்கம். கோடை காலங்களில் முருங்கைக்காய் விளைச்சல் குறைவாக இருக்கும்.

    இதனால், மார்ச் மாதம் முதல் கோடை காலம் முடியும் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படும். மற்ற நாட்களிலும் இந்த மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30-க்கு அதிகமான விலையில் விற்கப்படும். கடந்த வாரம் வரை திசையன்விளை மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது.


    மரங்களில் கொத்து கொத்தாக முருங்கைக்காய்கள் காய்த்து தொங்கும் படம்.

    கடந்த சில நாட்களாக, திசையன்விளை மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்தது. இதனால், முருங்கைக்காய் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை படிப்படியாக சரிந்து நேற்று ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகினர்.

    வியாபாரிகள குவிந்திருந்து முருங்கைக்காய்களை வாங்கி சென்றனர். மேலும், விவசாயிகள் பலரும் வைக்கோலுக்கு பதிலாக முருங்கைக்காய்களை வாங்கி, ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இது முருங்கைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து முருங்கைக்காய் விவசாயி ஒருவர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை தோட்டம் வைத்து பராமரித்து வருகிறோம். மழை காலங்களில் ஓரளவு முருங்கைக்காய் விளைச்சல் கிடைக்கும். கோடை காலத்தில் முருங்கைக்காய் விளைச்சல் வெகுவாக குறையும். இந்த கால கட்டத்தில், முருங்கை செடிகளில் மராமத்து பணிகள் செய்வோம். இதனால், முருங்கைக்காய் விளைச்சலும் குறைவாக இருக்கும். மார்க்கெட்டில் விலையும் அதிகரித்து விற்கப்படும்.

    இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால், செடிகளில் மராமத்து பணிகள் செய்யவில்லை. இதனால், செடிகளில் பூத்திருந்த பூக்கள் முழுமையாக காய்த்து கொத்து கொத்தாக காய்கள் விளைச்சலாகி உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் பல மடங்கு முருங்கைக்காய் விளைச்சல் ஆகியிருப்பதால் மார்க்கெட்டுக்கு நூற்றுக்கணக்கான மூடைகளில் வரத்து உள்ளது.

    இதனால், முருங்கைக்காய் கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோபால்துரை ரக முருங்கைக்காய் மட்டும் கிலோ ரூ.4-க்கு விற்பனை ஆகிறது, என்றார்.
    Next Story
    ×