search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மருத்துவம்-கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: ராமதாஸ்
    X

    அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மருத்துவம்-கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: ராமதாஸ்

    மத்திய அரசு உதவி பெறும் தன்னாட்சி நிறுவனங்களில் மருத்துவம்-கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு நிதி உதவி பெறும் தன்னாட்சி நிறுவனங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் 30 சதவீத கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. பொது மக்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 600 தன்னாட்சி நிறுவனங்களில் 400-க்கும் மேற்பட்டவை கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகும். ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்த ஆணையால் கல்வி மற்றும் மருத்துவக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக புதுச்சேரியில் ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் செயல் பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்கும் நிறுவனமாக ஜிப்மர் தான் திகழ்கிறது.

    இதனால் லட்சக் கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அவ்வாறு இருக்கும் போது ஜிப்மர் மருத்துவமனையின் வருவாயை 30 சதவீத அளவுக்கு பெருக்குவது எவ்வாறு சாத்தியமாகும். மத்திய நிதி அமைச்சகம் இப்போது பிறப்பித்துள்ள உத்தரவால் ஜிப்மர் மருத்துவ மனைக்கு மருத்துவம் பெற வருவோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் பிற கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் வருவாயை உயர்த்துவதற்கும் கல்விக்கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

    வருவாய் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் வருவாயை அதிகரிக்கும்படி மத்திய நிதியமைச்சகம் ஆணையிட்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை வணிக நோக்கத்துடன் அணுகுவதும், அவற்றின் வருவாயை பெருக்கும்படி கட்டாயப்படுத்துவதும் எதிர்கால மனிதவளத்தையும், உடல்நலத்தையும் சீர்குலைத்து விடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

    தன்னாட்சி நிறுவனங்களின் வருவாயை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அத்துடன் கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×