search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீர்.
    X
    மேட்டூர் அணையில் குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீர்.

    மேட்டூர் அணை வறண்டது: காவிரி கரையோரம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் கிராம மக்கள்

    மேட்டூர் அணை தண்ணீரின்றி வறண்டு போனதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததாலும் பருவ மழை பொய்த்ததாலும் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது.

    கடும் வறட்சியால் அகண்ட காவிரி ஆறு வறண்டு போய் காணப்படுகிறது. கடந்த வாரம் 2 நாட்கள் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் காவிரி ஆற்றில் நீரோடைபோல் தண்ணீர் ஓடியது. ஆனால் அதன்பிறகு மழை சுத்தமாக நின்று வெயில் அடிப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்துவிட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் பரிதாபகரமாக உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துவிட்டது. நேற்று அணைக்கு 118 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது 72 கன அடியாக குறைந்துவிட்டது. அணையின் நீர்மட்டமும் 29.28 அயடில் இருந்து 29.03 அடியாக குறைந்துவிட்டது.

    தினமும் நீர்மட்டம் சரிந்து வருவதால் இந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையை நம்பி உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம், பெரம்பலூர், அரியலூர் உள்பட 12 மாவட்டங்களில் கோடை காலத்தில் குடிநீர் வினியோகிக்க முடியாத அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் நகராட்சி குடிநீர் திட்டம், கொளத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், சேலம்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம் உள்பட 10 குடிநீர் திட்டங்களுக்கு தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கும் மேட்டூர் - மேச்சேரி பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கும் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அணையும் வறண்டு கொண்டே வருகிறது.

    அணையில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி உள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன் அணையில் குறைந்தபட்சம் 9.6 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர் ஆகும்) தண்ணீர் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 7.19 டி.எம்.சி.யாக உள்ளது.

    எனவே ஜூலை மாதம் தொடங்கும் பருவமழை காலம் வரை குடிநீர் திட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    மேட்டூர் அணையின் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருண பகவான் கருணை காட்டி கோடையில் மழையை கொடுத்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேட்டூர் அணையின் கரையோரம் உள்ள பண்ணவாடி பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அணையையொட்டி இருந்தாலும் தற்போது நிலவும் வறட்சியால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை.

    பண்ணவாடியில் உள்ள போர்வெல் மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. அதை சரிபார்க்காததால் போர்வெல் தண்ணீர் கூட கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை அங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.

    தற்போது போர்வெல் தண்ணீரும் கிடைக்காமல் காவிரி நீரும் கிடைக்காமல் பண்ணவாடி பகுதி கிராம மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    கால்நடைகளை காப்பாற்ற சேதம் அடைந்த குழாயில் இருந்து கசியும் தண்ணீரை பொதுமக்கள் குடங்களில் பிடித்து செல்கின்றனர். ஆனாலும் அந்த தண்ணீரும் எப்போதாவது தான் கிடைக்கிறது. இதனால் ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ. 600-க்கு வாங்கி கால்நடைகளை காப்பாற்றும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×