search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

    குடிநீர் கேட்டு மறியல்: அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் 10-ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

    குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்ததால், தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்ததால், நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள். அதிகாரிகள் தடுமாற்றத்தால் குடிநீர் உள்பட அடிப்படை தேவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இதே அவல நிலைக்கு தள்ளப்பட்ட, கூடநகரம் மக்களும் முதலில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கோரி தனி அதிகாரிகளிடம் முறையிட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கூடநகர பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மேல் ஆலத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே இன்று காலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.

    10-ம் வகுப்புக்கு இன்று கணித பொதுத்தேர்வு நடந்தது. இதற்காக 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பலர் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சில் தேர்வு மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். தேர்வுக்கு தாமதமாகுமோ? என்று அச்சமடைந்தனர்.

    இதையறிந்த மறியலில் ஈடுபட்ட மக்கள், பஸ்சை உடனடியாக விடுவித்தனர். மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக செல்லுமாறு கூறி தேர்வுக்கு வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த குடியாத்தம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நாகூரான் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் தேவி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    Next Story
    ×