search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் கோரிக்கையை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
    X

    விவசாயிகளின் கோரிக்கையை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய நதி நீர் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி சட்ட முன்வடிவு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், காவிரி வழக்கை மீண்டும் தீர்ப்பாயம் விசாரிக்கும், 4½ ஆண்டுகளுக்குள் விசாரித்து புதிய தீர்ப்பு வழங்கும் என்றும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இதுவரையில் அரசிதழில் வெளியிடவில்லை என்றும், இறுதி தீர்ப்பை எட்டவில்லை என்றெல்லாம் மத்திய மந்திரி உமாபாரதி உண்மைக்கு புறம்பாக பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்தநிலையில் நேற்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும் போது மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை எடப்பாடி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்ட பகுதிகள் பாசனம் பெறும் வகையில் புதிய பாசனத் திட்டம் அறிவித்து முதற்கட்டமாக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

    இதுகுறித்து தமிழக அரசின் காவிரி தொழில்நுட்பக்குழு உண்மை நிலையை தமிழக விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×