search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா குறித்து கவிதை எழுதிய கவிஞர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பு
    X

    ஜெயலலிதா குறித்து கவிதை எழுதிய கவிஞர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பு

    வாழப்பாடி அருகே ஜெயலலிதா குறித்து கவிதை எழுதிய கவிஞர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.
    வாழப்பாடி:

    ஜெயலலிதாவை பற்றி கவிதைகள் எழுதிய வாழப்பாடி பகுதியை சேர்ந்த கவிஞர் ஒருவர், தற்போது நோய்வாய்பட்டு ஆதரவின்றி தவித்து வருகிறார்.

    வாழப்பாடியை அடுத்த பேளூர் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம.கவிமணி, கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், சமய சொற்பொழிவாளர் என பன்முக திறமை கொண்டவர்.

    இவர், குறள்நெறி கூறும் கதைகள், திருக்குறளுக்கு பொருள் விளக்கம், ‘சிட்டுக்கு மெட்டு’ சிறுவர்கள் பாடல்கள், தன்னம்பிக்கை கட்டுரைகள், ஆவிகள் பற்றிய ‘அருள் உலகத்து அமுத மொழிகள்’ என பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.

    அவற்றில் சில அச்சிடப்படாமல் கையெழுத்து பிரதிகளாக உள்ளன. இதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி, 108 போற்றியும், தமிழக முதல்வரின் 68 வது பிறந்த நாள் விழாவையொட்டி, 4 வரிகள் கொண்ட 68 வெண்பாக்களையும் எழுதியுள்ளார். ஜெயலலிதாவை சந்திக்க இவர் பல முறை முயன்றும் முடியவில்லை.

    இந்த நிலையில், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், தற்போது நோய்வாய்ப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட வழியின்றி தவித்து வருகிறார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புகழ்பாடிய இவருக்கு, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து கவிஞர். ராம.கவிமணி கூறியதாவது:-

    ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கடந்தாண்டு மயங்கி கீழே விழுந்ததால், நோய்வாய்ப்பட்டு உள்ளேன். சிகிச்சைக்கு பல லட்சம் செலவு ஆகி விட்டதால், ஜெயலலிதா கவிதைகள் உள்ளிட்ட என் படைப்புகளை நூலாக்க முடியாமல் தடுமாறி வருகிறேன்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எனது மருத்துவ செலவிற்கும், படைப்புகளை வெளிக்கொணர்வதற்கும் அனைத்து உதவிகளையும் செய்திருப்பார். தற்போது மருத்துவ செலவிற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. அரசு தரப்பிலோ, ஆளுங்கட்சியினரோ எனது மருத்துவ செலவிற்கும், படைப்புகளை நூலாக வெளியிடுவதற்கும் உதவி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×