search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகை முற்றுகை
    X

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகை முற்றுகை

    புதுச்சேரியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அதோடு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், புதுவை அரசும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தன.

    புதுவை சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதுவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து புதுவை அரசின் சுகாதாரத்துறை மருத்துவ பட்டப்படிப்பு படிக்க விரும்பும் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியது.

    இதற்கிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதற்கிடையே புதுவையில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து நீட் எதிர்ப்பு நடவடிக்கை என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் அவர்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் இன்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன், தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், தன்னுரிமை கழகம் சடகோபன், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எழிலன், பிரபுராஜ், ஆனந்து, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.

    மேலும் இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குனர் டாக்டர் ராமன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை. அவர்கள் சட்டசபை வழியாக ஓட்டமும், நடையுமாக சென்று கவர்னர் மாளிகை முன்பு கூடினர்.

    அங்கு கவர்னருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர்.

    அப்போது அந்த வழியாக சுகாதாரத்துறை இயக்குனரின் கார் வந்தது. அந்த கார் முன்பு சிலர் படுத்து அங்கிருந்து காரை செல்ல விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முருகன் கூறியதாவது:-

    புதுவையில் மருத்துவ பட்டப்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு கடந்த காலங்களில் சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தியது போல் இந்த கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் என புதுவை அரசு சட்டம் இயற்றி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியது. இந்த சட்டத்தை கவர்னர் பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கவர்னர் கிரண்பேடி இந்த சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவே இல்லை.

    புதுவை அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். அவரை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து புதுவை மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரியும் இந்த போராட்டத்தை நடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×