search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்தேசம்-என் உரிமை கட்சி இளைஞர்கள்.
    X
    நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்தேசம்-என் உரிமை கட்சி இளைஞர்கள்.

    மெரீனாவை போல் நெடுவாசலிலும் வெல்வோம்: என் தேசம்-என் உரிமை கட்சியினர் நம்பிக்கை

    மெரீனா போராட்டத்தை போல் நெடுவாசல் போராட்டத்திலும் வெல்வோம் என்று புதிதாக தொடங்கிய என் தேசம்-என் உரிமை கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ‘என் தேசம் - என் உரிமை’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளர்கள் எபிநேசர், பிரகாஷ் உள்பட பலர் நெடுவாசலில் போராட்ட களத்தில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    மெரீனா போராட்டத்தை போல் நெடுவாசல் போராட்டமும் தீவிரம் அடையும். இது மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமும் வெற்றி பெறும்.

    இங்கு சாதி, மதம், அரசியல் எதற்கும் இடமில்லை. இளைஞர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ள எங்கள் கட்சியை சிதைக்க அரசியல் கட்சிகள் திட்டமிடுகின்றன. அந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் என் தேசம்- என் உரிமை கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்கிறார்கள்.

    மெரீனா போராட்ட களத்தில் 3 நாட்களுக்கு பிறகுதான் எங்களை பார்த்ததாக விலாசினி என்பவர் கூறி இருக்கிறார். முதல் நாளே அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நாங்களும் கலந்து கொண்டது அவர் பார்வையில் படவில்லை என்றால் முகநூலில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைதியாக நடந்த போராட்டத்தை சீர்குலைக்க அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டி விட்டன. அடித்து விரட்டியது போலீஸ். நமக்கென்று ஒரு அமைப்பு இல்லாததால் தானே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை.

    நமக்கு ஒரு அமைப்பு தேவை. அதிகாரம் தேவை. அதற்காகவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு யாரும் தலைவர் கிடையாது. மாநில, மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட போகிறார்கள்.

    மெரீனா போராட்டம் என்பது மெரீனா கடற்கரையில் நடந்தது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். வரும் காலங்களிலும் மக்கள் பிரச்சினைக்காக இப்படி திரளுவது சாத்தியமா? அமைப்பு ரீதியாக ஒன்றிணைவோம். அரசியலும் புனிதமானது என்பதை நிரூபிப்போம்.

    இளைஞர்களை திரட்ட ஒரு பிளாட்பாரத்தை உருவாக்கி இருக்கிறோம். யாரோ சிலரின் தூண்டுதலால் அதை உடைக்க முயல வேண்டாம்.

    மக்களுக்கு சேவை செய்யவும், நமது உரிமைகள் பறிபோவதை தடுப்பதும்தான் நமது நோக்கம். இந்த அமைப்பு தேவையில்லை என்பது சில அரசியல் கட்சிகளின் விருப்பம். அவர்களின் விருப்பத்துக்கு இளைஞர்கள் இரையாகி விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    * * * நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்தேசம்-என் உரிமை கட்சி இளைஞர்கள்.
    Next Story
    ×