search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே 10-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
    X

    திண்டுக்கல் அருகே 10-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

    திண்டுக்கல் அருகில் உள்ள சித்தரேவு பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால எண்ணை செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு அருகே வடமேற்கில் 5 கி.மீ தொலைவில் ஓவா மலை உள்ளது. இங்கு போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன், ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று செக்கு உரலில் இருப்பதை கண்டறிந்தனர்.

    இந்த செக்கு உரல் கல்வெட்டில் வட்டெழுத்துகள் தமிழ் மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிப்புகள் காணப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர் சாந்தலிங்கம் தெரிவிக்கையில்,

    ஓவா மலையில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 910-ம் நூற்றாண்டைச் சேரந்த எண்ணை செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை வெண்பி நாட்டின் குறண்டி எனும் ஊரைச் சேர்ந்த சோமன் அருளன் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது.

    குறண்டி என்பது மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டில் ஆவியூருக்கு அருகில் இருக்கும் ஊராகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க பராந்கபர்வதம் என்னும் மலையில் ஸ்ரீவல்லம் பெரும்பள்ளி, திருக்காட்டாம்பள்ளி என்ற பெயர்களில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது.

    பாண்டியர் காலத்தில் மாராயன் என்பது அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் மாராயன் என்ற அதிகாரிக்கு இந்த செக்கு மூலமாக எண்ணை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டதற்கான எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும், அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பாதுகாப்பு இல்லாத இந்த வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×